வேலூர்: “கருணாநிதியை வைத்துக் கொண்டே ஈழத்தமிழர் விவகாரத்தை பேசியுள்ளோம். அத்தகைய துணிச்சல் கொண்ட என்னால் திமுகவினரை வைத்துக் கொண்டு மது ஒழிப்பு குறித்து பேச முடியும்,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வேலூரில் இன்று (செப்.17) மாலை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல மகளிர் கலந்தாய்வு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்திடவும், அனைத்து சமூக பிரிவினரும் இடஒதுக்கீட்டின் பலனை பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பதவி உயர்வு, தனியார் துறை ஆகியவற்றில் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அதேசமயம், நாட்டில் தற்போது சமூகநீதிக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் மெல்லமெல்ல இடஒதுக்கீடு முறையை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி நடத்த உள்ள மது, போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பங்கேற்க விமர்சனங்களை பொருட்படுத்தாமல் திமுகவும் பங்கேற்கும் என முதல்வர் உறுதியளித்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.முதலாவதாக தமிழகத்தில் படிப்படியாக மதுபான கடைகளையும், மதுபான விற்பனை இலக்கையும் குறைத்து முழுமையாக மதுவிலக்கை எட்டுவது என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைக்கிறோம். இரண்டாவதாக அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி இதே கோரிக்கையை மத்திய அரசுக்கும் விடுக்கிறோம். கடந்த 1955-ம் ஆண்டில் மத்திய அரசு அமைத்த ஸ்ரீமன் நாராயணன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மது விற்பனையை ரூ.45 ஆயிரம் கோடியை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்தாமல் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதேபோல், கடைகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதையெல்லாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்மறையாக விமர்சிக்கின்றனர். அதற்கு அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதே காரணமாகும். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் உள்ளது. ஆனால் முன்பு நான் விடுத்த ஒரு பொதுவான வேண்டுகோளை அரசியலாக்குகின்றனர்.
1999-ம் ஆண்டு தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த விடுதலை சிறுத்தைகள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கோரிக்கை விடுத்தது. அப்போது பேசியிருந்த வீடியோ காட்சியை எங்களது சமூக ஊடக நண்பர்கள் பதிவிட்டிருந்தனர். அதில், குறிப்பிட்ட தகவலை சேர்க்காமல் பதிவிட்டதால் ஏற்பட்ட குழப்பத்தை வைத்து அரசியலாக்கியவர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில்தான் தேர்தல் குறித்த முடிவுகளை எடுப்போம். இப்போது, சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, இந்த மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் முடிச்சுப்போட வேண்டியதில்லை.
திமுகவினரை வைத்துக் கொண்டு எப்படி மது ஒழிப்பை பேச முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களால் முடியாதது, என்னால் முடியும். கருணாநிதியை வைத்துக் கொண்டே ஈழத்தமிழர் விவகாரத்தை பேசியுள்ளோம். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவில் பயணித்துள்ளேன். அத்தகைய துணிச்சல் கொண்ட என்னால் திமுகவினரை வைத்துக் கொண்டு மது ஒழிப்பு குறித்து பேச முடியும். பாஜகவின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்பதால் எதிர்க்கின்றனர்,” என்று அவர் கூறினார்.