Rohit Sharma : `வேர்ல்ட் கப்ப ஜெயிச்சிட்டோம்னு அசால்ட்டா இருக்க முடியாது!' – ரோஹித் தீர்க்கம்!

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக கடந்த சில நாள்களாகவே இரண்டு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rohit Sharma

இந்நிலையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார்.

ரோஹித் சர்மா பேசியதாவது, “நாங்கள் ஆடும் ஒவ்வொரு போட்டியுமே எங்களுக்கு முக்கியம்தான். டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அட்டவணையில் இன்னும் பல அணிகளுக்கும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படியிருக்க ஆடுகின்ற ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டிய சூழலில்தான் நாங்கள் இருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு நாங்கள் கிரிக்கெட் ஆடப்போகிறோம். இதுவே ஒரு பெரிய இடைவெளியாகத்தான் தெரிகிறது. இந்தப் போட்டி தொடங்கினால்தான் நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெரியும்.

Rohit

ஒரு வீரர் கடந்த 10-15 ஆண்டுகளில் அணிக்காக என்ன செய்திருக்கிறார், கடந்த சில மாதங்களில் என்ன செய்திருக்கிறார், கடந்த இரண்டு சீரிஸ்களில் என்ன செய்திருக்கிறார் இதையெல்லாம் மனதில் வைத்துதான் லெவனை தேர்ந்தெடுப்போம்.

6-8 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டே ஆடாமல் மீண்டும் டெஸ்ட் ஆட வருவது கடினமான விஷயம்தான். ஆனால், எங்கள் அணியில் நிறைய அனுபவமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதேமாதிரியான சூழலை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு இது சார்ந்த அனுபவமெல்லாம் இருக்கிறது. மேலும், 12 ஆம் தேதியே நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இங்கேயும் பயிற்சியில் நிறைய நேரத்தை செலவிட்டிருக்கிறோம். சில வீரர்கள் துலிப் டிராபியிலும் ஆடிவிட்டு வந்திருக்கிறார்கள். அதுவும் எங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என நம்புகிறேன்.

உலகக்கோப்பையை வென்றுவிட்டதால் இந்தத் தொடர்களில் அழுத்தம் இல்லாமல் ஆடுகிறீர்களா என கேட்கிறீர்கள். இந்தியாவில் நிச்சயமாக அப்படியான நிலை இல்லை. இங்கே ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு தொடரும் அதிக அழுத்தமிக்கதுதான். ஒரு இரதரப்புத் தொடரை இழந்தால் கூட இங்கே பிரச்னைதான். உலகக்கோப்பையை வென்றுவிட்டதால் இலகுவாக என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலெல்லாம் இல்லை.

Virat Kohli

சிறந்த வீரர்கள் எல்லா போட்டியிலும் ஆட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், பௌலர்கள் விஷயத்தில் அப்படி செய்ய முடியாது. அவர்கள் நிறைய போட்டிகளில் ஆடும்போது பணிச்சுமையை மனதில் வைத்துதான் நாமும் சில முடிவுகளை எடுக்க முடியும்.

ஒவ்வொரு போட்டியையும் எப்படி வெல்லலாம் என்கிற எண்ணம்தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு சில வீரர்கள் மட்டுமே கரியர் முழுவதும் சிறப்பான நிலையில் இருந்திருக்கிறார்கள். மற்றபடி எல்லாருமே ஏற்ற இறக்கங்களை சந்தித்துகொண்டுதான் இருக்கிறார்கள். கே.எல்.ராகுலின் திறன் என்னவென்பது எங்களுக்குத் தெரியும். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெரிதாக ஜொலிக்காததற்கு என்ன காரணமென தெரியவில்லை. அவரிடமிருந்து சிறப்பான செயல்பாட்டை வெளிக்கொண்டு வருவது எங்களின் கடமையும் கூட. ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், சர்ப்ராஸ் கான் என இளம் வீரர்கள் எல்லாருமே சிறப்பான வீரர்களாக உருவெடுக்கும் திறனோடு இருக்கிறார்கள். ஒரு அணியாக எங்களுக்கு எல்லாவிதமான வீரர்களுமே தேவைப்படுகிறார்கள்” என்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் உங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.