பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் போலீஸார் நடத்திய சோதனையில் 5 கத்திகள், 15 செல்போன்கள் 2 பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின.
கன்னட நடிகர் தர்ஷன், தனதுதோழியை கிண்டல் செய்த ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து தர்ஷன், பெல்லாரியிலுள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெங்களூரு நகர காவல்துறை துணை ஆணையர் சாரா பாத்திமா தலைமையில் 40 போலீஸார் சிறையில் சோதனை நடத்தினர். அதில் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கில், பிரபல ரவுடி வில்சன் கார்டன் நாகா அடைக்கப்பட்டுள்ளார். அந்த பிளாக்கில் சோதனை நடத்தியதில் ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சாம்சங் செல்போன் சிக்கியது.
இதுதவிர 14 செல்போன்களும், 2 பென் டிரைவ்களும் சிக்கின. 5 கத்திகள், ரூ.36,000 ரொக்க பணம், பீடி, சிகரெட், தீப்பெட்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர காபி தூள், முட்டை, காய்கறிகள், பழங்கள் ஆகியவையும் சிக்கின. இதனால் சிறையில் தர்ஷன்உள்ளிட்ட கைதிகள் விதிமுறைகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது உறுதியாகி உள்ளதாக சோதனையில் ஈடுபட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்.