பெய்ரூட்: லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷூகர் உயிரிழந்தார். இதன்பிறகு இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், செல்போன்களை பயன்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக பழங்கால பேஜரை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்தும் பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.
லெபனான் தலைநகர் பெய்ரூட்உட்பட அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேஜர்கள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. இதில் ஆயிரத்துக்கும்மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன.
இதுகுறித்து அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்தும் பேஜரில் லித்தியம் பேட்டரி உள்ளது. இவை அதிக சூடானால் வெடித்துச் சிதறும். இஸ்ரேல் உளவுத் துறை, சைபர் தாக்குதல்மூலம் பேட்டரிகளை அதிக சூடாக்கி வெடித்துச் சிதறச் செய்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.