புதுடெல்லி: மாநகராட்சி சட்டங்களின் கீழ் புல்டோசர் மூலம் கட்டிடங்களை இடிப்பதை அக்டோபர் 1-ம் தேதி வரை நிறுத்திவைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தால் அவர்களது வீட்டை இடிக்கும் பணிகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் உத்தர பிரதேசத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இதேபோல் குஜராத்தின் கேதா மாவட்டத்தில் உள்ள கத்லால் என்ற இடத்தில் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரின் வீட்டை புல்டோசர் மூலம் இடிக் கப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த முடிவை எதிர்த்து மனுதாரரும், மற்றொரு நில உரிமையாளரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், சுதான்சு துலியா, எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது புல்டோசர் மூலம் குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கும் அரசின் செயலை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ‘‘சட்டம் முதன்மையாக உள்ள நாட்டில், வீடுகளை இடிக்கும் அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்பத்தில் உள்ள ஒருவர் சட்டவிதிமுறைகளை மீறினார் என்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும்வீட்டை இடிக்க முடியாது. குற்றச்செயலில் ஈடுபட்டால், வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை’’ என நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் சாலைகள், நீர் நிலைகள், ரயில்பாதைகள் தவிர மற்ற இடங்களில் புல்டோசர் மூலம் கட்டிடங்களை இடிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாநகராட்சி சட்டத்தின் படி ஒரு சொத்தை எப்போது, எப்படி இடிக்க வேண்டும் என்பதற்கான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.