ஹூலுன்பியர்,
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சீனாவை எதிர்கொண்டது.
சீனாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய இறுதி போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகளில் சீன கொடியை வைத்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கான பயிற்சியாளரும் கூட கைகளில் சீன கொடியை பிடித்தபடி காணப்பட்டார். சொந்த நாட்டு கொடியை வைத்திருப்பதற்கு பதிலாக, போட்டியை நடத்திய சீன அணியின் கொடியை வைத்திருந்தது சர்ச்சையானது. இது இந்தியாவுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்த கூடிய வகையில் பார்க்கப்பட்டது.
இதுபற்றிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதில், ஆச்சரியப்பட கூடிய விசயம் என்னவெனில், அரையிறுதி போட்டியில் சீனாவிடம் பாகிஸ்தான் தோற்று போயிருந்தது. எனினும், இறுதி போட்டியில் சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை இந்திய அணி தட்டி சென்றது. இதனை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதேபோன்று, இந்தியா 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது.