புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஒரு வாரத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்வார் என்று அக்கட்சி எம்.பி., சஞ்சய் சிங் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், கேஜ்ரிவாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் கடவுள் அவரைக் காப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி., சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமாவால் டெல்லி மக்கள் கோபத்தில் உள்ளனர். அவர் ராஜினாமா செய்ய வேண்டிய தேவை என்னவென்று கேள்வி எழுப்புகின்றனர். டெல்லி மக்கள் அதிக பெரும்பான்மையுடன் அரவிந்த் கேஜ்ரிவாலின் நேர்மைக்கு நற்சான்றிதழ் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
அவர் டெல்லி மக்களுக்காக முழு நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றியுள்ளார். முதல்வருக்கு பல வசதிகள் கிடைக்கின்றன. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் அந்த வசதிகள் கிடைத்தன. நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன் முதல் விஷயமாக இந்த வசதிகளை விட்டுவிடுவேன். இன்னும் ஒருவார காலத்தில் அதிகாரபூர்வ இல்லைத்தை காலி செய்து விடுவேன் என்றார்.
அவரது பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஒன்றல்ல பலமுறை அவர் தாக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை விளக்க முயன்றோம். பாஜகவைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்கினர். அவர் முதல்வர் என்பதால் மட்டும் இல்லை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த வீடுதான் அவருக்கு பாதுகாப்பு என்பதை விளக்க முயன்றோம். ஆனால் கடவுள் அவரைக் காப்பார் என்று அவர் முடிவு செய்தார்.
அவர் (கேஜ்ரிவால்) 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும், பயங்கரகுற்றவாளிகளுக்கு மத்தியில் வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். இவை அனைத்திலும் இருந்து கடவுள் தன்னைப் பாதுகாத்தார், கடவுள் அவரைப் பாதுகாப்பார். நான் வீட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனால் நான் வீட்டை காலி செய்ய முடிவெடுத்தாக தெரிவித்தார். அவர் முதல்வர் இல்லாத்தில் இருந்து வெளியேறி பொதுமக்களுடன் வசிப்பார். அவர் எங்கு வசிக்கப்போகிறார் என்று இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு எம்.பி. தெரிவித்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்” என்றார். இதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவி ஏற்க உள்ளார்.