நாடகங்களில் அறிமுகமாகி, அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா.
வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இவர், நேற்று (செப்டம்பர் 17ம் தேதி), தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். நடன கலைஞர், குணச்சித்திர நடிகை, பிறகு கதாநாயகி என பல ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் CID சகுந்தலா. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு சீரியலில் நடித்து வந்தவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிப்புக்கு ஓய்வு தந்து பெங்களூருவில் தனது மகள் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வயோதிக பிரச்சனைகளைச் சந்தித்து வந்தவருக்கு நேற்று (செப்டம்பர் 17ம் தேதி) நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற கொஞ்ச நேரத்தில் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் நடிகை சிஐடி சகுத்தலாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் CID சகுந்தலா அவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர், “நடன கலைஞராய் உதயமாகி, CID சகுந்தலா என நட்சத்திரமாய் உருவாகி, நாட்டிய தாரகையாய் பிரபலமாகி, குணசித்திர நடிகையாய் கோலோச்சி திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த CID சகுந்தலா அம்மையாருடைய மறைவு திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
CID சகுந்தலா அம்மையாரின் மறைவு மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலைக் கூறி கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.