ஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மூன்று அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கியது முதல் இருந்தாலும், இந்த அணிகள் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஒவ்வொரு சீசன்களின் மிகமிக மோசமாக விளையாடி முதல் அணிகளாக இந்த மூன்றில் ஏதேனும் ஒரு அணி வெளியேறும். ஆண்டுதோறும் இந்தமுறையாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என களமிறங்கினாலும், முடிவு என்னவோ அவர்களுக்கு இதுவரை ஒரே மாதிரியாகவே இருந்திருக்கிறது.
ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் விளையாடிய பிளேயர்கள் எல்லாம் மற்ற அணிகளுக்கு சென்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், ஒரு அணியாக இந்த மூன்று அணிகளும் ஐபிஎல் சாம்பியன் கோப்பைக்கு 17 ஆண்டுகளாக காத்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்வதற்காக ஒட்டுமொத்த அணியிலும் பல்வேறு மாற்றங்களை இந்த மூன்று அணிகளும் செய்யும். என்ன மாற்றங்கள் செய்தாலும் தோல்வி என்பது மட்டும் அவர்களுக்கான முடிவாகவே இருந்திருக்கிறது. மாற்றங்கள் பல வந்தாலும் முடிவு மாறவில்லை. அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக பெரிய மாற்றத்தை இம்முறையும் செய்திருக்கிறது.
பிபிகேஎஸ் அணி புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளது. அவர் யார் என்றால், ஆஸ்திரேலிய அணியின் தவிர்க்க முடியாத கேப்டனாக விளங்கியவரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ரிக்கி பாண்டிங் தான். ஐபிஎல் 2025 தொடரில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியளித்தாலும், ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை அந்த அணி வெல்லவில்லை. இதனால் அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிக்க அந்த அணி முடிவு செய்திருக்கிறது. இதனால் ரிக்கி பாண்டிங்கை தங்கள் அணிக்கு கொண்டு வந்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ரிக்கி பாண்டிங் வருகையால், பஞ்சாப் அணி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்கான பிளேயர்கள் தேர்வில் ரிக்கி பாண்டிங் கலந்து கொள்ள இருக்கிறார். முக்கியமான ஆஸ்திரேலிய பிளேயர்களை அவர் டார்க்கெட் செய்து இந்த ஏலத்தில் எடுப்பார் என தெரிகிறது.