கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: புளியரையில் தீவிர கண்காணிப்பு

தென்காசி: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதைத் தொடர்ந்து. தமிழக – கேரள எல்லைகளில் மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் மீண்டும் சோதனைச் சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் கூறும்போது, “கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தது கண்டறியப்பட்டதால் தமிழகத்திலும் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைவரிடமும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண காய்ச்சலா அல்லது நிபா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு சுகாதார ஆய்வாளர், போலீஸார் ஒருவர் மற்றும் சுகாதாரத்துறையில் 3 பேர் வீதம் 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து பழங்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்தி, அவற்றில் பறவைகள் கொத்திய தடயங்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.