Ind Vs Ban: 'டெஸ்ட் சீசனை தொடங்கும் இந்திய அணி; முன் நிற்கும் அந்த 3 சவால்கள்!

இந்திய அணி தனது டெஸ்ட் சீசனை தொடங்கவிருக்கிறது. 2025 ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக இப்போதிருந்து இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக நாளை சேப்பாக்கத்தில் தொடங்கவிருக்கும் டெஸ்ட் போட்டியோடு இந்திய அணியின் இந்த பயணம் தொடங்குகிறது. இந்த வங்கதேசத் தொடரில் இந்திய அணிக்கான சவால்கள் என்னென்ன?

ஒயிட்பால் ஹேங் ஓவர்:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல் தொடங்கியது. இரண்டரை மாதங்கள் நீண்ட ஐ.பி.எல் க்கு பிறகு ஜீன் மாதம் முழுவதும் உலகக்கோப்பைப் போட்டிகள் நடந்திருந்தது. அதன்பிறகு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று டி20 மற்றும் ஓடிஐ தொடரில் ஆடியிருந்தது. ஆக, இந்திய அணி ரெட் பால் கிரிக்கெட்டில் ஆடியே 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சமீபத்தில் நடந்த துலிப் டிராபி தொடரிலுமே கூட ஒரு சில வீரர்கள் மட்டுமே ஆடியிருந்தனர். பெரும்பாலான வீரர்கள் ஒயிட்பால் ஹேங் ஓவரிலேயே இருக்கின்றனர்.

ரோஹித்

டெஸ்ட் மனநிலைக்கு அவர்கள் தங்களை எந்த சிக்கலும் இல்லாமல் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் இந்திய அணி சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மாவிடம் கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் ஆடாதது பிரச்சனைதான். ஆனால், எங்கள் அணியில் சீனியர் வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் இதேமாதிரியான சூழலில் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அதனால் இந்த சவாலை நாங்கள் கடந்துவிடுவோம்.’ என நம்பிக்கையோடு பேசியிருந்தார். இந்த நம்பிக்கையான பேச்சு களத்திலும் எதிரொலிக்க வேண்டும்.

வங்கதேசத்தின் ஃபார்ம்:

‘நாங்கள் யாரை கண்டும் பயப்படமாட்டோம். அதேநேரத்தில் எல்லாரையும் மதிக்கிறோம். வங்கதேசத்தை குறைத்து மதிப்பிடமாட்டோம்.’ என பேசியிருந்தார். வங்கதேசத்தின் தற்போதைய ஃபார்ம் நன்றாக இருக்கிறது. பாகிஸ்தானில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்திய தெம்போடு வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக பல இக்கட்டான சூழல்களில் அந்த அணி சிக்கியிருந்தபோதும் அதிலிருந்து மீண்டு வந்து முன்னேறினர்.

மிகச்சிறப்பாக போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி அந்த வெற்றியை வங்கதேசம் பெற்றிருந்தனர். வங்கதேசம் டெஸ்ட் அந்தஸ்து பெற்று 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 24 ஆண்டுகளில் இந்தியாவையும் தென்னாப்பிரிக்காவையும் மட்டும்தான் வங்கதேசம் இன்னும் வீழ்த்தவில்லை. மேலும், இந்தியாவில் வைத்து இந்தியாவை இதுவரைக்கும் மூன்றே மூன்று முறை மட்டும்தான் வங்கதேசம் எதிர்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்திவிட்டு வருவதால் இந்தியாவையும் வீழ்த்த இதுதான் சரியான சமயம் என வங்கதேசம் தயாராக நிற்கிறது. இந்த சமயத்திப் வங்கதேசத்தை இந்திய அணி கூடுதல் ஜாக்கிரதையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

பாயிண்ட்ஸ் டேபிள்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணிதான் முன்னிலையில் இருக்கிறது. ஆனாலும் இந்த முன்னிலையை இந்திய அணி தக்கவைக்க நிறைய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடவிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வைத்தே அந்த போட்டிகள் நடைபெறவிருப்பதால் அந்தத் தொடர் இந்தியாவுக்கு சவால்மிக்கதாக இருக்கும். ஆக, அதற்கு முன்பு இந்தியாவில் வைத்தே இந்திய அணி ஆடும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளை இந்தியா வெல்ல வேண்டும். அப்படி வெல்லும்பட்சத்தில்தான் பார்டர் கவாஸ்கர் தொடரில் எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும்.

இந்தியா அணி எப்படி சவால்களை எதிர்கொள்ளப் போகிறது? உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.