ஜம்மு மற்றும் காஷ்மீர்: முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து பெற்றது. லடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவற்றில் முதல்கட்ட தேர்தலில், காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும் ஜம்மு பகுதியில் 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது, நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு அமைதியாக நடந்து முடிந்து மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது என தேர்தல் ஆணையம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இரவு 11.30 மணியளவிலான தேர்தல் ஆணைய தரவுகளின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தேர்தலில் அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதனை தொடர்ந்து தோடா (71.34 சதவீதம்), ராம்பன் (70.55 சதவீதம்), குல்காம் (62.60 சதவீதம்), அனந்த்நாக் (57.84 சதவீதம்) மற்றும் சோபியான் (55.96 சதவீதம்) வாக்குகளும் பதிவாகி உள்ளன.

புல்வாமா மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக 46.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. முதல்கட்ட தேர்தலில் அதிக அளவில் வந்து வாக்காளர்கள் வாக்களித்ததற்காக கவர்னர் மனோஜ் சின்ஹா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். ஜனநாயகம் மலர்ந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் கைகோர்த்து கூட்டணியாக போட்டியிடுகின்றன. எனினும், பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுகின்றன. சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனர்.

டெல்லி கோர்ட்டில் இடைக்கால ஜாமீன் பெற்ற என்ஜினீயர் ரஷீத்தின் அவாமி இத்திஹாத் கட்சியும் தேர்தலை சந்திக்கிறது. 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதி நடைபெறுகிறது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 8-ந்தேதி எண்ணப்படும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.