“சந்திரபாபு நாயுடு செய்வது அரசியல்” – திருப்பதி லட்டு சர்ச்சையில் ஜெகன் மோகன் தாக்கு

அமராவதி: திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையை மறுத்துள்ள முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மக்களினம் நம்பிக்கையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியலுக்காகப் பயன்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம்: கடந்த புதன்கிழமை (18ம் தேதி) முதல் இந்த விவகாரம் பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக வெளியாகி உள்ள அறிக்கை தவறானது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்களின் நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு: முன்னதாக, அமராவதியில் கடந்த 18ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து, மிக முக்கிய பேசுபொருளாக மாறியது.

நர லோகேஷ்: இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திரப் பிரதேச ஐடி அமைச்சருமான நர லோகேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரசுவாமி கோயில் மிகவும் புனிதமான கோயில். ஜெகன் மோகன் ரெட்டி நிர்வாகம், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் அரசு, மக்களின் மத உணர்வுகளை மதிக்கவில்லை” என விமர்சித்திருந்தார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் சொந்தமாக ஆய்வக வசதி இல்லை. வெளியே ஆய்வு செய்யலாம் என்றால், ஆய்வகக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. நெய் சப்ளை செய்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, ​​சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

பாஜக அதிர்ச்சி: இந்த விவகாரம் குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள பாஜக, இது மன்னிக்க முடியாத பாவம் என குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பண்டி சஞ்சை, திருப்பதி பெருமாள் கோயிலின் புனித பிரசாதத்துக்கு எதிராக நடந்துள்ள மன்னிக்க முடியாத பெரும் பாவம் இது. ஜெகன் மோகன் முதல்வராக இருந்தபோது, திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் மாற்று மதத்தவர்கள் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.