TVK: தவெக-வின் முதல் மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரம் – என்ன திட்டம் வைத்திருக்கிறார் விஜய்?

மாநாடு அறிவிப்பு!

தமிழகத்தில் உச்ச சினிமா நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி மற்றும் பாடலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். கட்சியின் கொள்கை கோட்பாடுகளைத் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாட்டில் அறிவிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், மாநாட்டுத் தேதியும் அறிவித்திருக்கிறார் விஜய். முதல் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

மாநாடு அறிவிப்பு

மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்குக் காவல்துறை தரப்பிலும் 21 கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரப்பூர்வமாகப் பதில் சொல்ல காவல்துறை தரப்பில் 33 நிபந்தனைகள் சொல்லப்பட்டிருந்தது. அனுமதி ஒருபக்கம் செல்ல மாநாடு பணிகளை மேற்கொள்ள ஆயுத்தமாகிவருகிறார்கள் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள்.

த.வெ.க-வின் திட்டம் என்ன?

கட்சியின் முதல் மாநாடு இந்த மாதம் நடைபெறும் என்று சொல்லப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 27-ம் தேதி மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநாட்டுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தயாராகிறார்கள்… என்ன திட்டம் என்பது குறித்து கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “மாநாடு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் தோறும் ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனைக் கட்சியின் பொதுச்செயலாளர் புதுச்சேரி ஆனந்த் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு கண்காணிக்கும். மாநாட்டுக்கு 33 நிபந்தனைகள் விதித்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப நாங்கள் தேர்வு செய்த தேதி இருக்கும்.

TVK Vijay – விஜய் த.வெ.க

மாநாட்டுக்கு எங்கிருந்து எவ்வளவு பேர் வருவார்கள், எந்த வாகனத்தில் வருவார்கள், யாரெல்லாம் வருவார்கள், வருபவர்களை ஒருங்கிணைப்பது யார், அவர்களின் தகவல் என்ன அவர்களின் விவரம் என்ன, அவர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்திருக்கிறது காவல்துறை. தற்போது அக்டோபர் 27-ம் தேதி மாலை மாநாடு நடைபெறும் என்று அனுமதி கேட்டிருக்கிறோம். அந்த தேதிக்கு அடுத்த சில தினத்திலேயே தீபாவளி பண்டிகை வருகிறது. அந்த தேதியில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் சொந்த ஊருக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும். இதில் மாநாட்டுக்கு வருபவர்களைக் காவல்துறை அவ்வளவு எளிதில் எந்த தொந்தரவும் செய்யாது. தடுக்கவும் முடியாது.

பிரச்னை இருக்காது!

மாநாட்டுக்கு வருபவர்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவது என்பதில் பெரிய சிக்கல் இருந்தது. அதனையும் முழுவதுமாகச் சரி செய்திருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த 45 ஏக்கர் இடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே இன்னொரு 27 ஏக்கர் நிலத்தை மட்டும் பயன்படுத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய வாகன நெரிசல் ஏற்படும். எனவே மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் நிலத்துக்கு அருகிலேயே மற்றொரு பெரிய இடத்தைத் தேர்வு செய்து அந்த இடத்தில் வாகனம் நிறுத்திக்கொள்ள ஒப்பந்தமும் போட்டுவிட்டோம். எனவே வாகன நிறுத்தம் இனி ஒரு பிரச்னையாக இருக்காது. மேடை அமைப்புக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேடை மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடம் மிகவும் பிரமாண்டமாகவே இருக்கும்.

Vijay TVK – விஜய் த.வெ.க

தற்போதைய நிலையில் ஐம்பதாயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி பெற்றிருக்கிறோம். அந்தளவு தொண்டர்களை ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்டம் வாரியாக ஒருங்கிணைத்து வருகிறார்கள். அதே நேரத்தில் தன்னிச்சையாக வருபவர்கள் குறித்து எங்களால் எதுவும் சொல்லமுடியாது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே தோப்புகளில் வருபவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, தலைவர் விஜய் தங்கவும் அருகில் உள்ள பண்ணை வீடுகளைத் தேர்வு செய்திருக்கிறோம். நான்கு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் விழா நடக்கும் மேடைக்குத் தலைவர் சுமார் 6 மணிபோல வந்தடைவர். மாநாட்டில் கட்சியின் கொள்கைகளைத் தலைவர் அறிவிப்பார். அன்றைய தினம் தலைவர் விஜய் ஆற்றப்போகும் உரை தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றனர் விரிவாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.