இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர்… யார் இந்த அநுர குமார திசாநாயக்க?

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்புடன் அவர் பதவியேற்கவுள்ளார்.

உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தல் வேண்டும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மூன்றாவது முறையாக இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பதவி வகிக்க முடியாது. மேலும், அதிபர் அரசின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும், நிறைவேற்று அதிகாரங்கள் கொண்டவராகவும் பதவி வகிப்பார்.

இலங்கையில் முதல் அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்தன 1982ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசவும், 1994 மற்றும் 1999ம் ஆண்டுகளில் சந்திரிக்கா குமாரதுங்கவும், 2005 மற்றும் 2010 ஆண்டுகளில் மகிந்த ராஜபக்சவும், 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபால சிறிசேனாவும், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச 52 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2022ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் நடத்தியதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

9-வது அதிபர் தேர்தலில் 38 பேர் போட்டி: ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஒன்பதாவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலுக்காக 40 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதில் சுயேச்சை வேட்பாளர் ஏ. முகமது இலியாஸ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மரணமடைந்தார். அதிபர் ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாகவும், எதிர் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பாகவும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகவும், தமிழ் பொது கூட்டமைப்பு சார்பாக அரியநேந்திரன் உள்ளிட்ட 38 பேர் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த அதிபர் தேர்தலில் அதிக எண்ணிகையில் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கடந்த தேர்தல்களை விட நீளமான 2 அடி நீளத்தில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டது. தேர்தலில் 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் 13,421 வாக்குச் சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 70 % வாக்குகள் பதிவாகின. சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்து. சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருந்து வந்தார். அவருக்கு 42.31% (5,634,915) வாக்குகளும், சஜித் பிரேமதாசவிற்கு 32.76% (4,363,035) வாக்குகளும், ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27 % (2,299,767) வாக்குகுளும், நமல் ராஜபக்சவுக்கு 2.57 % (342,781) வாக்குகளும், அரியநேந்திரனுக்கு 1.70% (226,343) வாக்குகளும் கிடைத்தன. ஆனால் வெற்றிக்குத் தேவையான 50 % வாக்குகளை யாரும் பெறவில்லை.

இலங்கை அதிபர் தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால், ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணியளவில் இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் முதல் இரு இடங்களைப் பெற்ற அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

விருப்ப வாக்கு முறை: இலங்கையில் அதிபர் தேர்தல் விருப்ப வாக்கு முறையில் நடைபெறும். வாக்காளர்கள் அதிகபட்சம் ஒரு வாக்குச்சீட்டில் மூவருக்குத் தமது விருப்ப வாக்குகளை அளிக்கலாம். 50 சதவீதத்துக்கு அதிகமாக முதற்கட்ட விருப்ப வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

முதற்கட்ட விருப்ப வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், இதில் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட விருப்ப வாக்கெடுப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் 2-ம் விருப்பத் தேர்வாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் கணக்கிடப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதன் பின்னரும் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாவிட்டால் 3-ம் விருப்ப வாக்கு கணக்கிடப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் அதிபராவார்.

இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டதில் அநுர குமார திசாநாயக்க அதில் வெற்றிப் பெற்றதால் மொத்தம் 5,740,179 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப் பட்டார். இரண்டாவது வந்த சஜித் பிரேமதாச மொத்தம் பெற்ற வாக்குகள் 4,530,902 ஆகும்.

யார் இந்த அநுர குமார திசாநாயக்க? – இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968ல் கூலி தொழிலாளியின் மகனாய் அநுர குமார திசாநாயக்க பிறந்தார். தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

1988ம் வருடம் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.

2014ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும் இலங்கையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.