திருச்சி: சமூகத்துக்கு திருப்பித் தரும் பழக்கம்தான் நம்மை சிறந்த மனிதர்களாக்கும் என தந்தை பெரியார் கல்லூரியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி தெரிவித்தார்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஐம்பெரும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கா.வாசுதேவன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச்செயலாளர் க.ராஜலிங்கம் வரவேற்றார். பேராசிரியர்கள் எல்.செல்லப்பா, மு.அ.முஸ்தபா கமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் மாணவர்கள் பலரும் பங்கேற்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற எஸ்பி பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த 1972-73ம் ஆண்டு காலத்தில் மணவர் சமுதாயம் பல போராட்டங்களை கண்டது. பல கல்லூரிகள் அப்போது என்னை சேர்க்க மறுத்தன. நீ வா உன்னை தேத்தி விடுகிறேன் என்று எனக்கு படிக்க வாய்ப்பளித்து இந்தளவுக்கு உயர்வான இடத்துக்கு கொண்டு வந்து அழகு பார்த்தது தந்தை பெரியார் கல்லூரி” என்றார்.
ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் பேசுகையில், “கல்வித்துறையில் ஆதிக்க சக்திகள் நிறைந்த அந்த காலத்தில் என்னைப் போன்ற எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு வாழ்வளித்த கல்லூரி தந்தை பெரியார் கல்லூரி” என்றார். பத்மஸ்ரீ விருது பெற்ற சுப்புரராமன் பேசுகையில், “பிஎஸ்சி வேதியியல் துறைக்கு பல கல்லூரிகளில் விண்ணப்பித்து புறக்கணிக்கப்பட்ட எனக்கு இந்தக் கல்லூரி வாய்ப்பு வழங்கியது. மிகவும் கஷ்டப்பட்டு படித்து, இன்று பத்மஸ்ரீ விருது பெற காரணமான இக்கல்லூரியை என்றும் மறவேன்” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், “நாம் அடுத்தவர்களுக்காக தரும் பரிசுகளில் மிகச்சிறந்தது, அவர்களுக்காக நாம் செலவிடக்கூடிய நேரம் தான். திருச்சியில் மேல்தட்டு வர்க்கத்தினர், சிறுபான்மையினருக்கு என கல்லூரிகள் இருந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்லூரியை பெரியார் தொடங்கி உள்ளார்.
பெரியாரின் மாணவராக திகழக்கூடிய எம்.பி சிவா, திருநங்கைகளுக்காக தனிநபர் மசோதா கொண்டு வந்தார். நாங்கள் அனைவரும் பிறந்ததிலிருந்தே திமுகவினர் தான். எல்லோருடைய உடலிலும் சிவப்பணுக்கள் என்றால், எங்களுடைய உடலுக்குள் ஓடுவது கறுப்பு, சிவப்பு அணுக்கள் என்ற பெருமிதம் எங்களுக்கு உண்டு. கல்லூரிக் காலத்தில் நாம் கொள்ளும் நட்பு என்பது காலத்துக்கும் வரக்கூடியது.
வேறு வேறு கருத்தாக்கங்கள் கொண்ட ராஜாஜி, திரு.வி.க, குன்றக்குடி அடிகளாரோடும் பெரியார் நட்பு பாராட்டினார். நட்புக்கு, நாகரீக அரசியலுக்கு இலக்கணகமாக திழந்தவர் பெரியார். உங்கள் கடவுள் ஏன் சாதியை உருவாக்கினார் என்று பெரியார் கேட்டபோது, ‘சாதியை மனிதன் உருவாக்கினான்’ என்று குன்றக்குடி அடிகளார் சொல்வதும், அப்படியானால் சாதியை நாம் இருவரும் ஒழிப்போம் என்று கைகோர்த்து பணியாற்றினார். ‘எனக்கும் கடவுளுக்கும் என்னப்பா தகராறு. நான் அவரை முன்னப்பின்ன பார்த்தது கூட இல்லை’ என்று நகைச்சுவையாக பெரியார் கூறினார்.
இவையெல்லம் பெரியாரின் நட்புக்கு, நாகரீக அரசியலுக்கு இலக்கணமாக திகழ்பவை. அவருடைய பெயரைத் தாங்கிய இக்கல்லூரி பலரது வாழ்வுக்கு ஒளிவிளக்காக உள்ளது. ஒரு மனிதன் பெறும் பட்டங்கள், அடையக்கூடிய உயரங்கள் அவரை சமூகநீதியின் பால் சிறப்பாக செயல்படுபவராக ஆக்கிவிட முடியாது. படிப்பு, அனுபவம், தகுதி என்பது சமூகத்துக்கு நீங்கள் எத்தனை விஷயங்களை நீங்கள் திருப்பித் தருகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. அவை தான் உங்களை சிறந்த மனிதர்களாக ஆக்கும்” என்றார்.
சங்க புரவலரும், எம்பி-யுமான திருச்சி சிவா பேசுகையில், “இந்தக் கல்லூரி இல்லையென்றால் நான் இங்கு இல்லை. நட்புகள், நினைவுகள் ஏராளம் உள்ளன. இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் இன்று இல்லை. இந்த விழாவுக்கு வந்த மகிழ்வைக் காட்டிலும், நம்மை விட்டு பிரிந்த, வர இயலாத நிலையில் உள்ள நண்பர்களை எண்ணி மனவேதனை தான் அதிகரிக்கிறது. இருக்கும் வரை நட்புகளை கொண்டாட இதுபோன்ற சங்கம விழாக்கள் அவசியம்.
இந்த விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வாங்குவதற்காக பழைய டெல்லிக்கு சென்றேன். நீங்கள் நினைப்பது போல் பழைய டெல்லி வெளிநாடுபோல இருக்காது. குதும்பினார் தூணை விட உயரமான குப்பை மேடுகள் நிறைந்த மோசமான நகரம் அது. அங்கு நினைவுப்பரிசுகளை வாங்கிக் கொண்டு, ரயிலில் அனுப்பி வைத்தேன். அதற்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றார்கள். அதுதான் ரொம்ப வேடிக்கை. சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்பதுபோல அப்பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி மட்டும் ரூ.40 ஆயிரம்” என்றார்.