ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் புதிய மாற்றங்கள்! இந்த விதி இனி இருக்காது?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது, காரணம் இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறும் இந்த மெகா ஏலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும். ஏனென்றால் தங்களுக்கு பிடித்த வீரர்கள் எந்த அணிக்காக விளையாடப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவனுடன் காத்துக் கொண்டு இருப்பார்கள். மற்ற ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தை விட இந்த ஆண்டு நடைபெற உள்ள ஏலத்தில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்கள் தக்கவைப்பு முதல் RTM வரை புதிய அறிவிப்புகளை பிசிசிஐ வெளியிடவுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்று பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.  மேலும் இந்த ஆண்டு என்னென்ன விதிகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் இல்லை. கடந்த மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியது. எனவே இந்த ஆண்டு ஏலத்தில் பல விதிகளில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வீரர்கள் தக்கவைப்பு

இந்த ஆண்டு நிறைய அணிகள் கூடுதல் வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும். இந்த முறை அதனை ஐந்து வீரர்களாக மாற்ற அணியின் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஐந்து வீரர்களை தக்கவைத்து கொண்டால் தான் அணியின் தரம் பாதிக்காமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதவிர ஏலத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்டிஎம்

ரைட் டு மேட்ச் கார்ட் தொடர்பான முக்கிய முடிவு இந்த முறை எடுக்கப்பட உள்ளது. பல ஐபிஎல் அணிகள் இந்த கார்டை விரும்பவில்லை. ஒவ்வொரு வீரர்களின் வளர்ச்சி மற்றும் பணப்பையை RTM கட்டுப்படுத்துகிறது என்று பல முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே பிசிசிஐ என்ன இறுதி முடிவு எடுக்க உள்ளது என்பதை தெரிந்து கொள்ள சுவாரஸ்யமாக இருக்கும்.

ஐபிஎல் வீரர்களின் சம்பளம்

இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் வீரர்களின் சம்பள வரம்பில் சில சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஐபிஎல் 2024 ஏலத்தில், சம்பள வரம்பு ரூ. 100 கோடியாக இருந்தது. இருப்பினும், ஒவ்வொரு வீரர்களின் தேவைகளும் அதிகரித்து வருவதால் அதனை இந்த ஆண்டு ரூ. 120 முதல் ரூ. 140 கோடியாக உயர்த்துவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் பரிசு தொகையை (ரூ. 20 கோடி) விட, மிட்செல் ஸ்டார்க்கின் சம்பளம் (ரூ. 24.75 கோடி) அதிகமாக இருந்தது. 

இம்பாக்ட் வீரர் விதி

கடந்த 2023ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் இம்பாக்ட் பிளேயர் விதியை பலரும் விரும்பவில்லை. தோனி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இதனை வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஏனெனில் இது ஆல்-ரவுண்டர்களின் பங்கை அணியில் குறைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த விதி 11 வீரர்களுக்கு பதிலாக 12 வீரர்களை விளையாட அனுமதிக்கிறது என்றும், கிரிக்கெட்டின் சாராம்சத்தை பாதிக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் பிசிசிஐக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. எனவே இது குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஐபிஎல் 2025 ஏல தேதி

ஐபிஎல் 2025 ஏலம் எப்போது நடைபெறும் என்பதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. கடந்த காலங்களில், ஐபிஎல் மெகா ஏலம் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெற்றது. ஐபிஎல் 2025 ஏல தேதியை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நவம்பரில் ஏலம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.