அரசு சந்தேகிக்கும் டெலிகிராம் பயனரின் விவரங்கள் பகிரப்படும்: சிஇஓ பவெல் துரோவ்

பாரிஸ்: சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பயனர்களின் மொபைல் எண், ஐபி அட்ரஸ் போன்ற விவரங்கள் அரசுக்கு பகிரப்படும் என டெலிகிராம் நிறுவன சிஇஓ பவெல் துரோவ் அறிவித்துள்ளார்.

டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது. இந்த வழக்கில் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், டெலிகிராமில் சில மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார்.

டெலிகிராம் பயனர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அரசு விசாரணை அமைப்புகள் சந்தேகித்தால் மற்றும் அந்த பயனர்களின் விவரம் வேண்டும் எனும் சட்ட ரீதியாக கேட்கும் பட்சத்தில் அதை நாங்கள் பகிர உள்ளோம். இந்த மாற்றங்களை அமலுக்கு கொண்டு வரும் விதமாக செயலியில் மேஜர் அப்டேட் ஒன்றை வழங்க உள்ளோம். இதன் மூலம் டெலிகிராம் தளத்தில் பயனர்கள் சட்டவிரோத பொருட்கள் அல்லது கன்டென்ட் குறித்து தேடுவது (Search) தடுக்கப்படும். மேலும், பயனர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பயனர்களின் விவரங்கள் வேண்டும் என அரசு தரப்பு கேட்கும் பட்சத்தில் அது வழங்கப்படும்.

டெலிகிராமின் சேர்ச் பாரின் (Search Bar) தேடல் அம்சம் நண்பர்கள் மற்றும் செய்திகளை கண்டறியும் நோக்கில் இயங்குகிறது. மாறாக சட்ட விரோத செயல்களுக்காக இந்த அம்சம் இல்லை. இந்த மாற்றத்தில் ஏஐ நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம். இதன் மூலம் போதைப் பொருள், மோசடி, சிறார் ஆபாசப் படங்கள் போன்றவற்றை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார். எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் சுட்டிக்காட்டாமல் பொதுவாக அரசு என்றே பவெல் துரோவ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் டெலிகிராம் அதன் அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பானதாக மாற்றம் காண்கிறது. அதோடு அவர்களது பிரைவசியும் உறுதி செய்யப்படுகிறது. மறுபக்கம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது சவால் அளிக்கும் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.