IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?

IND vs BAN Kanpur Test Pitch And Playing XI Changes: வங்கதேச அணி பாகிஸ்தானில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற கையோடு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி அதன் நீண்ட டெஸ்ட்  சீசனை தற்போது தொடங்கியிருக்கிறது. 

அந்த வகையில், கடந்த 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய வங்கதேசத்திற்கான முதல் டெஸ்ட் போட்டியை நான்கு நாள்கள், அதாவது 10 செஷன்களிலேயே இந்தியா (Team India) நிறைவுசெய்து 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை வைட்வாஷ் செய்தால் WTC புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் அதிகம் வரும் என்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.

2வது டெஸ்ட் போட்டி

அந்த வகையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப். 27ஆம் தேதி தொடங்க உள்ளது. கான்பூரில் ஆடுகளம் எப்படி இருக்கும், அதற்கு ஏற்றவாறு இந்திய அணி செய்ய உள்ள மாற்றங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.

கான்பூர் ஆடுகளம் எப்படி?

இந்தியா – வங்கதேசம் அணிகள் அதன் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடியது சிவுப்பு களிமண் ஆடுகளம் ஆகும். இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மும்பையில் இருந்து எடுத்து வரப்பட்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செம்மண் ஆடுகளத்தில் விளையாடியதால் முதல் போட்டியில் நல்ல பௌன்ஸ் கிடைத்தது. இதனால் இரண்டு அணிகளும் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கின. அதேபோல், மூன்றாம் நாளில்தான் ஆடுகளம் மெதுவாக தொடங்கியது. பெரிதாக எவ்வித விரிசலும் இல்லை எனலாம். 

சென்னை ஆடுகளம் இப்படி என்றால் கான்பூர் ஆடுகளம் முற்றிலும் வேறானது. கான்பூர் மைதானத்தில் கருப்பு மண் ஆடுகளத்தில்தான் இந்தியா – வங்கதேசம் அணிகள் போட்டியை விளையாட உள்ளன. இதில் சென்னையில் பார்த்த அளவுக்கு பௌன்ஸ் இருக்காது. முட்டிக்கு மேல் பந்து எழுந்தால் ஆச்சர்யம்தான். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இதில் பெரிய பலன் கிடைக்காது. சுழற்பந்துவீச்சாளர்கள் அதிரடியாக தாக்கலாம். ஆடுகளமும் விரைவாகவே மெதுவாகிவிடும்.

2021, 2016 கான்பூர் டெஸ்ட் போட்டிகள்

எனவே, இதுபோன்ற ஆடுகளத்தை புரிந்துகொண்டு விளையாடும்பட்சத்தில் பேட்டிங்கும் சிறப்பாக விளையாடலாம். கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து உடன் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஷ்ரேயாஸ் ஐயர் அந்த போட்டியில்தான் டெஸ்டில் அறிமுகமானார். அவர் ஒரு சதமும், அரைசதமும் அடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு கடைசிவரை போராடி டிரா செய்தது. ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

அதற்கு முன் 2016ஆம் ஆண்டில்தான் கான்பூர் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடந்திருந்தது. அதிலும் நியூசிலாந்து உடன்தான் இந்தியா மோதியது. ஆனால் அந்த போட்டியில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளும் 5ஆம் நாள் வரை சென்றதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். அந்தளவிற்கு பேட்டிங்கிற்கு கைக்கொடுக்கும் ஆடுகளம் எனலாம். சுழற்பந்துவீச்சை சுதாரித்து ஆடி நிதானம் காட்டும் வீரர்களுக்கு இங்கு நல்ல வாய்ப்பிருக்கிறது எனலாம். 

இந்திய பிளேயிங் லெவன் மாற்றம்?

அந்த வகையில், இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற பார்முலாவுடன் வரலாம். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், அஸ்வின், ஜடேஜா உடன் அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் விளையாடுவார்கள். குல்தீப் யாதவிற்கு இங்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும், சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்பட்டு யாஷ் தயாள் உள்ளே வரலாம். இவை அனைத்தும் பந்துவீச்சுக்கு மட்டுமே…

பேட்டிங்கில் மாற்றம் வருமா?

பேட்டிங் ஆர்டர் இப்போதுதான் செட்டாகி வருகிறது என்பதால் அதில் கை வைக்க கம்பீர் – ரோஹித் இணை யோசிக்கலாம். சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைக்குமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது. மறுபுறம் வங்கதேச அணியும் (Team Bangladesh) 3 சுழற்பந்துவீச்சாளர்கள், 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன்தான் வரும். ஷகிப் அல் ஹாசனுக்கு ஏற்கெனவே காயம் ஏற்பட்டுள்ளதால் மெஹிடி ஹாசன் மிராஸ் உடன் இடதுகை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் மற்றும் ஆப் ஸ்பின்னர் நைம் ஹாசன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். நகித் ராணா அமரவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | டெஸ்ட் அணியில் இடம் பெரும் ஹர்திக் பாண்டியா? இந்த வீரரின் இடத்திற்கு ஆபத்து!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.