இலங்கையில் அதிரடி – ‘ஊழல் பெரும்புள்ளிகள்’ தப்ப முடியாதபடி விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

ராமேசுவரம்: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாதபடி கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 நவம்பரில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதிலிருந்து, அநுர குமார திசாநாயக்க ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கையில் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டஙகளிலும் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்து வந்தார். இதனால் இலங்கையில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது.

தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கையின் கடந்த கால அரசாங்கங்களில் புரையோடியிருந்த ஊழல், வீண் விரயம், மோசடி முறைகேடுகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அநுர குமார திசாநாயக்க முன்னெடுத்தார். இவை, அவரின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், கடந்த கால அரசியல் கூட்டங்களைக் காட்டிலும் பெருமளவு மக்கள் கூட்டத்தை திரட்டியது. இதனால், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசாநாயக்க, தற்போதைய அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

அநுர குமார திசாநாயக்க அதிபரானதும், இலங்கையில் பல்வேறு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக 30 பேர்களுடைய பெயர் விவரங்கள் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளிடம் தரப்பட்டுள்ளது. கொழும்பு விமான நிலையத்திற்கு சில அரசியல்வாதிகள் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், கடந்த ஆட்சிக் கால கட்டங்களில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.