வியட்நாம் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஆலோசனை

நியூயார்க் (அமெரிக்கா): அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உச்சிமாநாட்டிற்கு இடையே, வியட்நாம் அதிபர் டோ லாம்-ஐ சந்தித்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற எதிர்கால உச்சிமாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், வியட்நாம் சோசலிச குடியரசின் அதிபருமான டோ லாம்-ஐ நியூயார்க்கில் சந்தித்தார்.

தலைமைப் பொறுப்புகளை ஏற்றுள்ள அதிபர் டோ லாமுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தொடர்ந்து ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் யாகி சூறாவளியால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதங்களை எதிர்கொண்ட வியட்நாமுக்கு தமது அனுதாபத்தை பிரதமர் மீண்டும் தெரிவித்தார். சத்பவ் நடவடிக்கையின் கீழ் அவசரகால மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை இந்தியா உரிய நேரத்தில் வழங்கியதற்காக பிரதமருக்கு அதிபர் டோ லாம் நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே அசைக்க முடியாத பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்கள் ஆகியவற்றால் குறிக்கப்படும் ஆழமான நாகரிகம் மற்றும் கலாச்சார இணைப்புகள் மற்றும் வளர்ந்து வரும் ராஜ்ஜிய உறவுகளின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் கடந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த அவர்கள், இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.

இந்தோ-பசிபிக் உள்ளிட்ட முக்கியமான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், சர்வதேச தளங்களில் உலகளாவிய தெற்கிற்கான கூட்டுப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.