எமர்ஜென்சியில்கூட இவ்வளவு நாள் சிறை கிடையாது: செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: சகோதரர் வி.செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறை என்பது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில்கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச்செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைப்பதன்மூலம் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தனர். ஆனால், முன்னிலும் உரம் பெற்றவராக சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது. உறுதி அதனினும் பெரிது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

திமுக செய்தித் தொடர்பு துறை தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன் கூறும்போது, ‘‘செந்தில் பாலாஜி அமைச்சராக தடையில்லை என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்’’ என்றார்.

‘குற்றமற்றவன் என நிரூபிப்பேன்’ – இதற்கிடையே, சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் மற்றும் சென்னை, திருவள்ளூர், கரூர், கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் மாலை அணிவித்தும், கட்சி துண்டு அணிவித்தும் வரவேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு குற்றமற்றவன் என நிரூபிப்பேன். என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.