Lubber Pandhu: `கலங்கிய கனவு; சினிமா, சீரியல், தொகுப்பாளினி' – விடாமுயற்சியால் வென்ற அசோதாவின் கதை

‘லப்பர் பந்து’ படத்தின் அசோதை கதாபாத்திரம் எழுதப்பட்டதுக்கேற்ப அவ்வளவு துல்லியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்வாசிகா.

நேற்றைய தினம் நடைபெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றி விழாவிலும் இவரின் அசோதை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்ப்பை எண்ணி நெகிழ்ச்சியடைந்தார். அந்த விழாவில், ” 16 வயசுல கனவோட சென்னைக்கு வந்தேன். ஆனா கனவு நிறைவேறாமல் நானும் அம்மாவும் ஊருக்கு ரயில் ஏறினோம். இப்போது நான் கண்ட கனவைப் போல என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு!’ எனக் கூறி கண் கலங்கினார்.

தன்னுடைய 16 வயதிலேயே இவர் நடிக்க தொடங்கிவிட்டார். ‘வைகை’ என்ற தமிழ் திரைப்படம் மூலமாகதான் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்தார். ஆனால் இவர் நினைத்ததைப் போல அந்தத் தொடக்கம் இவருக்கு சரியாக கரம் கொடுக்கவில்லை. அதன் பிறகு 2010-ல் இயக்குநர் ராசு மாதுரவன் இயக்கத்தில் உருவான ‘கோரிப்பாளையம்’ திரைப்படத்திலும் நடித்தார். ஆனால், இவர் நடித்த கதாபாத்திரத்திம் பெரியளவில் பேசப்படவில்லை. அதன் பிறகும் தமிழில் பல படங்களில் நடித்தார். அத்திரைப்படங்களும் சரியான வெற்றியை எட்டவில்லை. ‘சாட்டை’ திரைப்படத்திலும் சமுத்திக்கனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, ‘அப்புச்சி கிராமம்’ திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். இதுமட்டுமல்ல தமிழில் சில துணை கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆனால், இவர் நடித்த திரைப்படமும் இவர் நடித்த கதாபாத்திரங்களும் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

Swasika

இப்படியான தோல்வியைக் கண்டு அவர் துவண்டுவிடாமல் அடுத்தடுத்து மலையாளத்தில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். மம்முட்டி, மோகன் லால் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மம்முட்டியுடன் ‘ஒரு குட்டநதன் ப்ளாக்’, ‘சி.பி.ஐ -5’ , போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இது மட்டுமல்லாமல் மோகன் லாலுடன் ‘இட்டிமணி – மேட் இன் சீனா’, ‘ஆராத்து’, ‘மான்ஸ்டர்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஹிட்டடித்த பல மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கடந்த மாதம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘நுண்ணக்குழி’ படத்திலும் நடித்திருந்தார் ஸ்வசிகா. இதுபோன்ற தொடர் முயற்சியால் மலையாள சினிமாவில் கவனிக்கத்தக்க வகையில் அங்கீகாரத்தையும் பெற்றார்.

மலையாளத்தில் வெளியான ‘வசந்தி’ திரைப்படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் ஸ்வாசிகா. இவரின் நடிப்பிற்காக பாராட்டை பெற்றதோடு கேரள மாநில அரசு விருதையும் பெற்றார்.நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஸ்வாசிகா திரைப்படங்களில் மட்டுமல்ல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். சினிமாவை விட தொலைக்காட்சி தொடர் ஒரு நடிகரை கடைகோடி வரை கொண்டுச் செல்லும். இவர் நினைத்தது போல சீரியல்களும் இவருக்கு கை கொடுத்தது. சீரியல்கள் மூலமாகவும் மக்களிடையே பெரிதளவில் பரிச்சயமானார். சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாளத்தின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

Asodha Character – Swasika

மலையாள சினிமாவில் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும் தமிழில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் இருந்துக் கொண்டே இருந்தது. அந்த ஆசையும் தற்போது ‘லப்பர் பந்து’ திரைப்படம் மூலமாக நிறைவேறியிருக்கிறது. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவும் இந்தக் கதாபாத்திரத்திற்கு பல நடிகர்களை தேடியிருக்கிறார். இறுதியாகதான் ஸ்வாசிகாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஸ்வாசிகாவும் அந்த கதாபாத்திர தன்மையை முழுமையாக புரிந்துகொண்டு திரைப்படத்தில் ‘கெத்து’ பாத்திரத்தின் மனைவியாக கெத்து காட்டியிருந்தார். வாழ்த்துகள் ஸ்வாசிகா…

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.