IND vs BAN: சுப்மான் கில் நீக்கம்! வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி!

வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று செப்டம்பர் 27ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது. ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். 

டெஸ்ட் தொடர் முடிவிற்கு பிறகு, இந்திய அணி வங்காளதேசத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி அக்டோபர் 6ம் தேதி குவாலியரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதவராவ் சிந்தியா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி அக்டோபர் 9ம் தேதி டெல்லியிலும், கடைசி போட்டி அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது. இந்திய அணி கடைசியாக இலங்கைக்கு எதிராக ஜூலை மாதம் டி20 தொடரில் விளையாடியது. இதில் இலங்கை அணியை அவர்களது சொந்த மண்ணில் 3-0 என்று வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் சூர்யாகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

யார் யாருக்கு வாய்ப்பு?

பங்களாதேஷ் தொடரிலும் சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற புச்சி பாபு டிராபி போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் துலீப் டிராபியின் முதல் இரண்டு சுற்றுகளை தவறவிட்டார். பிறகு இந்திய B அணிக்காக மூன்றாவது போட்டியில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்தார். தற்போது ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவும் பங்களாதேஷ் தொடரில் விளையாட உள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ஹர்திக், தனிப்பட்ட காரணங்களால் ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. பங்களாதேஷ் டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், துருவ் ஜூரல், கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இரானி கோப்பை அக்டோபர் 1 முதல் 5 வரை லக்னோவில் நடைபெற உள்ளதால் சில வீரர்கள் இடம் பெறாமல் போக வாய்ப்புள்ளது. கெய்க்வாட், இஷான் இடம் பெறவில்லை என்றால் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடலாம். டெஸ்ட் அணியில் விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட உள்ளது. ரியான் பராக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரையும் தேர்வு குழு பரிசீலிக்கலாம். மேலும் குல்தீப் யாதவ், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரில் இரண்டு பேர் இடம் பெற வாய்ப்புள்ளது. ரிங்கு சிங், ஷிவம் துபே மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. 

இந்தியாவின் உத்ததேச அணி: அபிஷேக் சர்மா, ருதுராஜ் கைகுவாட், சஞ்சு சாம்சன் (WK), சூர்யகுமார் யாதவ் (சி), ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், ஹர்ஷித் ராணா, ஜிதேஷ் சர்மா (WK), நிதிஷ் ரெட்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.