“காஷ்மீரில் ரிலையன்ஸின் சில்லறை விற்பனை கடைகள் வேகமாக அதிகரிப்பு, ஆனால்…” – பிரியங்கா காந்தி

பிஷ்னா (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீரில் ரிலையன்ஸின் சில்லறை விற்பனைக் கடைகள் வேகமாக அதிகரிக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிஷ்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி வதேரா உரையாற்றினார். அப்போது அவர், “என் பாட்டி (இந்திரா காந்தி) ஒரு முறை காஷ்மீர் செல்ல வேண்டும் என்றார். அவருடன் நாங்களும் காஷ்மீர் வந்தோம். முதலில் கீர் பவானி மாதா கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் டெல்லி திரும்பிய ​​மூன்று – நான்கு நாட்களில் எனது பாட்டி வீரமரணம் அடைந்தார். அந்த மரணம், அவருடைய நிலத்திலிருந்தும் தாயிடமிருந்தும் அவருக்கு வந்த அழைப்பு என்று நான் அடிக்கடி உணர்கிறேன். அதனால் ஸ்ரீநகர் வரும்போதெல்லாம் கீர் பவானி மாதா கோவிலுக்குச் சென்று என் பாட்டியை நினைத்துக் கொள்வேன்.

ஜம்மு காஷ்மீர் நாட்டின் உச்சம். இயற்கை அழகு, வளங்கள், சிறந்த ஆன்மீக குருக்களைக் கொண்டது ஜம்மு காஷ்மீர். இங்கு வாழ்ந்த ஆன்மீக குருக்கள், இங்கிருந்து பயணம் செய்து, நாட்டின் மற்ற பகுதிகளிலும், வெளிநாட்டிலும் மதம் மற்றும் அமைதியைப் பற்றி பேசினர். ஆனால், பாஜக தலைவர்கள் ஜம்மு காஷ்மீரை தங்கள் அரசியல் சதுரங்கத்தின் கைப்பாவையாக மாற்றிவிட்டனர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக கொள்கைகள் உருவாக்கப்படவில்லை. அவர்கள் இங்கு எதைச் செய்தாலும் அது நாட்டில் அரசியல் செய்ய உருவாக்கப்பட்டதாகும். மோடியின் பேச்சைக் கேட்டேன். அவரது பேச்சில் நேர்மை, உண்மை, தீவிரம் என எதுவும் இல்லை.

மோடி தனது உரையில், ரயில் நிலைய பணிகளை எண்ணிக்கொண்டிருந்தார். பொதுமக்களின் பிரச்சனைகளைப் பற்றி அவர் பேசவில்லை. இந்த மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டபோது, ​​உங்கள் நிலம், வேலை வாய்ப்பு, சிறு தொழில்களை வலுப்படுத்தும் உரிமை ஆகியவையும் பறிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பிரதமரின் விருப்பப்படி துணைநிலை ஆளுநர் ஆட்சி நடத்தி வருகிறார். கொள்ளையடிக்கும் மற்றும் தொலைதூர ஆட்சி இங்கு நிறுவப்பட்டுள்ளது. உங்கள் நிலங்கள் நில வங்கிகளாக மாறிவிட்டன.

பெரிய தொழிலதிபர்கள் தங்கள் சில்லறை விற்பனைக் கடைகளை இங்கே திறக்கிறார்கள், உங்கள் சிறு வணிகங்கள் அழிக்கப்படுகின்றன. ரிலையன்ஸின் சில்லறை விற்பனைக் கடைகள் ஜம்மு காஷ்மீரில் வேகமாக விரிவடைகின்றன. உள்ளூர் கடைகள் மற்றும் சந்தைகளின் வணிகத்தை யார் அதிகரிப்பார்கள்? அனைத்து ஒப்பந்தங்களும் அவர்களின் நண்பர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. வெளி நிறுவனங்களைக் கொண்டு உங்கள் சிறு வணிகம் அழிக்கப்படுகிறது. நரேந்திர மோடி அதானி-அம்பானியை மையமாக வைத்து வணிகங்களை ஊக்குவிக்கிறார்.

இன்று நாட்டில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் 65% அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகளின் தாள்கள் கசிந்துள்ளன. 450 கனிமத் தொகுதிகளில் 200-க்கான ஒப்பந்தங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உங்கள் மணல் மற்றும் கற்கள் வெளியே அனுப்பப்படுகிறது. நீங்கள் வாங்க வேண்டும் என்றால் அதிக விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் வளங்கள் மற்றும் உரிமைகள் பாஜகவால் பாதிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களின் வாழ்க்கை இன்னல்களால் நிரம்பியுள்ளது. உங்கள் உரிமைகளைத் திருப்பித் தருவதன் மூலம் உங்களைப் பலப்படுத்த காங்கிரஸ் பாடுபடும்” என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.