‘உதயநிதியிடம் தந்தையின் உறுதி, தாத்தாவின் கடும் உழைப்பு இருக்கிறது’ – ஈவிகேஎஸ். இளங்கோவன்

மதுரை: துணை முதல்வராகும் உதயநிதியிடம் தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உள்ளது என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் காங்கிரஸ் தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மறைந்த கோவிந்தராஜன் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியது: துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத் துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சரான ஓராண்டில் சிறப்பாக பணி செய்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர். துணை முதல்வராக அவர் பதவியேற்றால் சிறந்த முறையில் பணியாற்றுவார். உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது தந்தை முக. ஸ்டாலின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தேர்தலின்போது, இந்தியளவில் எதிர்ப்பு வந்தது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி இருந்தார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது குறித்து விமர்சனம் இரண்டு புறமும் இருக்கலாம். 471 நாள் சிறையில் ஜாமீன் கூட கொடுக்காமல், மத்திய அரசு பழிவாங்கும் செயலை செய்தது. உடல்நிலை சரியின்றி இதய பிரச்சினையில் இருந்த அவரை மத்திய அரசு வஞ்சித்தது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைத்தது போன்று எதிர்க்கட்சியில் தலைவர்களை சிறையில் வைத்தால் அடங்கி விடுவார்கள் என, மத்திய அரசு நினைக்கிறது.

இந்திய மக்கள் ஒரு மனதாக மோடியை தூக்கி எறியவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அந்த எண்ணம் மோடிக்கு புரிந்ததால் அவரின் முகத்தில் உற்சாகம் கொஞ்சமும் இல்லை. வெளிநாடு செல்லும்போது, மட்டும் சிரிக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அனைத்து கட்சியினரின் விருப்பம் தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்பது அனைத்துக் கட்சிகளும் சொல்லி இருக்கின்றனர். முதல்வர் மு,க. ஸ்டாலினும் இது பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டணி முன்பை விட வலுவாக இருக்கிறது.

திமுக பவள விழாவில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இக் கூட்டணி எண்ணிக்கைக்காக இன்றி கொள்கைக்காக சேர்ந்தவர்கள். கூட்டணி ஒன்றுபட்டு இருக்கும். தமிழக காங்கிரஸ் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வேலை கொடுக்கின்றனர். இன்னும் கொஞ்சம் தீவிர படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.