‘தீபாவளிக்குள் புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம்’ – நாராயணசாமி

புதுச்சேரி: “தீபாவளிக்குள் ரேஷன் கடைகளைத் திறக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநில அந்தஸ்தை கேட்டாலும், புதுச்சேரியை மத்திய உள்துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதால் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், மத்திய உள்துறை செயலரும் புதுச்சேரி வந்ததால் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலை உள்ளது. காரைக்கால் கோயில் சொத்து, பொது சொத்துகளை அபகரிப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறது. இதில் பல அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பங்கு உள்ளது. மிகப்பெரிய குற்றமாகும். கோயில் சொத்தை அபகரிக்கும் விஷயத்தில் முதல்வர் வேடிக்கை பார்க்கிறார்.

மெரினா கடற்கரை பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநருக்கு மனு தந்தும் பலன் இல்லை. இது தொடர்ந்தால் கோயில் சொத்து, அரசு சொத்து, தனியார் சொத்துகளுக்கு பாதுகாப்பு இருக்காது. பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் சொத்து அபகரிப்பும் நடக்கிறது. போலி பத்திரம் தயாரித்தல், போலி கையெழுத்திட்டு சொத்து அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிதிக்காக மத்திய உள்துறை செயலரிடம் முதல்வர் அளித்த மனுவில், சிறிய மாநிலமான புதுச்சேரியில் விமான நிலையம் கட்ட ரூ. 3 ஆயிரம் கோடியும், சட்டப்பேரவை கட்ட ரூ.400 கோடியும் தேவையா?

தற்போதுள்ள சட்டப்பேரவைக்கு அருகேயுள்ள கட்டிடங்களை எடுத்து தேவையான இடங்களை கட்டி சட்டப்பேரவையை உருவாக்கலாம். 30 எம்எல்ஏக்களுக்காக புதிய சட்டப்பேரவை அதிக செலவு செய்து கட்டவேண்டுமா? என சிந்தித்து பார்க்கவேண்டும்.

எதிர்க்கட்சி முதல்வர்கள் பிரதமரை சந்திக்கிறார்கள். ஆனால் டெல்லி சென்று பிரதமரை ஒரு முறைதான் முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அங்கு நடக்கும் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. மாநில மக்கள் நலனுக்காக டெல்லி சென்று பிரதமர், உள்துறை, நிதித்துறை அமைச்சர்களை சந்தித்து மாநில அந்தஸ்து, மாநில நிதி கேட்க வேண்டும்.

தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்கும் போது கடல் எல்லையை சரியாக பார்க்க முடியாது. இதில் நிரந்தர தீர்வை பிரதமரும், மத்திய அரசும் செய்யவேண்டும். முதல்வர்களால் செய்ய முடியாது. மத்திய அரசு இலங்கை அரசோ இணக்கமாக இல்லை. மிகப்பெரிய நாடான இந்தியாவை இலங்கை உதாசீனம் செய்கிறது. இதற்கு மத்திய அரசுதான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.மாநிலஅந்தஸ்து தேவை என 2011ல் முதல்வர் ரங்கசாமி சொன்னார், தற்போது 2024 ஆகிவிட்டது. மாநில அந்தஸ்துக்காக என்ன நடவடிக்கை எடுத்தார்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பதோடு சரி.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொதித்து எழுந்து கேள்வி கேட்டதால், தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடைகளைத் திறப்பதாக கூறினார். தேர்தல் முடிந்து 4 மாதங்களாகிவிட்டது. தற்போது தீபாவளிக்குள் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி தருவோம் என்கிறார். மகிழ்ச்சி. தீபாவளி வரை பார்ப்போம். அதன் பிறகும் ரேஷனை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். மின்கட்டணஉயர்வுக்கு நடந்ததுபோல் மிகப்பெரிய அளவில் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.