இந்தியாவில் இருந்து தப்பியோடிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு பாகிஸ்தானில் வரவேற்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக், பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஜாகிர் நாயக். பிரபல மதபோதகரான இவர், பிற மதங்களைவிட இஸ்லாம் எவ்வாறு உயர்வானது என்பது குறித்து தனது பீஸ் (Pease) தொலைக்காட்சி மூலம் விவாதங்களை நடத்தியவர். அவர் தனது விவாதங்களில் பிற மதங்களை கடுமையாக விமர்சித்ததாக அவர் மீது புகார் உள்ளது. இந்தியாவில் இருந்து தப்பி ஓடி மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக், சுமார் ஒரு மாத பயணமாக இன்று பாகிஸ்தான் சென்றுள்ளார். தனது மகனும் இஸ்லாமிய மதபோதகருமான ஃபரிக் நாயக் உடன் இஸ்லாமாபாத் சென்றுள்ள ஜாகிர் நாயக்-குக்கு பாகிஸ்தான் அரசு உற்சாக வரவேற்பு அளித்துள்ளது.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில், பாகிஸ்தான் பிரதமரின் இளைஞர் திட்டத்தின் தலைவர் ராணா மஷ்ஹுத், மத விவகார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சையத் டாக்டர் அட்டா உர் ரஹ்மான், மத விவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் ஷம்ஷர் அலி மசாரி உள்ளிட்டோர் ஜாகிர் நாயக் மற்றும் அவரது மகனை வரவேற்றனர். அவரது பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் மத விவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ‘ஜாகிர் நாயக் அக்டோபர் 28 வரை பாகிஸ்தானில் தங்குகிறார். இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் நகரங்களில் அவர் உரைகளை ஆற்ற உள்ளார். மேலும், வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கி உரையாற்றுவார். பாகிஸ்தானில் தங்கியிருக்கும் போது, ​​மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்து பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்’ என தெரிவித்தார். இஸ்லாமாபாத் வந்துள்ள ஜாகிர் நாயக்-குக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.