“அதானிதான் பிரதமர் மோடியின் கடவுள்!” – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: அதானிதான் பிரதமர் நரேந்திர மோடியின் கடவுள் என்றும், அதானி என்ன சொன்னாலும் அதனை நரேந்திர மோடி செய்கிறார் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெற்றி உறுதி யாத்திரை என்ற பெயரில் தோசட்கா சவுக் என்ற இடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “இந்த யாத்திரைக்கு திரண்டுள்ள உங்களைப் பார்க்கும்போது இது மாற்றத்துக்கான அழைப்பு என்பது தெளிவாகிறது. அதோடு, இது அநீதிக்கு எதிரான நீதியின் முழக்கம். ஹரியானாவில் ‘வலியின் தசாப்தத்தை’ முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, முழு பலத்துடன் அர்ப்பணிப்புடன் உள்ளது. எனவே, வெற்றி உறுதி.

ஹரியானாவில் 36 சமூகங்கள் கொண்ட அரசு அமைக்கப்படும். அனைவரின் பங்கையும் தீர்மானிக்கும் அரசாக அது அமைக்கப்படும். நீதிக்கான அரசாக அது இருக்கும். ஹரியானாவில் ஏற்பட்டிருக்கும் காங்கிரஸ் புயல் காரணமாக, ஆட்சி அதிகாரம் கை மாறும் நிலை வந்துவிட்டது. பிரதமர் மோடி, ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை ‘புயல்’ போல் பிடுங்கி அதானியின் கஜானாவில் ‘சுனாமி’ போல் போடுகிறார். எனது நோக்கம் – அவர் தனது ‘நண்பர்களுக்கு’ எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அவ்வளவு பணத்தை இந்தியாவின் ஏழை, எளிய, சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்குவேன்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குருஷேத்திரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு நரேந்திர மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் நரேந்திர மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். நரேந்திர மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் நரேந்திர மோடி செய்கிறார். மும்பை விமான நிலையம் வேண்டும்; இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும்; காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை; விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் நரேந்திர மோடி தருகிறார்” என குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.