Cyber Slavery: 'சைபர் அடிமைகளாக்கப்பட்ட 29,000 இந்தியர்கள்; மூன்றில் ஒருவர் தமிழர்' – பின்னணி என்ன?

இன்றைய சைபர் கிரைம் உலகின் லேட்டஸ்ட் உபயம், ‘சைபர் அடிமை’. தற்போது இந்தியாவிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற கிட்டதட்ட 29,000 பேர் சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் அடிமை என்றால்…

வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்திற்கோ அல்லது தங்களின் நாட்டிற்கோ வரவழைத்து, அம்மக்களை சைபர் கிரைம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகிறார். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களை ‘சைபர் அடிமைகள்’ என்று வகைப்படுத்துகிறார்கள்.

கம்போடியாவிற்குச் சென்ற சுமார் 5,000 இந்தியர்கள் மீண்டும் இந்தியா திரும்பாதபோதுதான் இந்தப் பிரச்னை முதன்முதலாக இந்தியாவில் பெருமளவு கவனம் பெற்றது. இவர்கள் கட்டாயப்படுத்தி சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கம்போடியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள்…

தரவுகள் என்ன சொல்கிறது?

சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்ட தரவுகளின் படி,

  • 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2024-ம் ஆண்டு மே வரை, ‘விசிட்டிங் விசா’ மூலம் கம்போடியா, தாய்லாந்து, மியான்மார், வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொண்ட 29,466 இந்தியர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை.

  • இந்த மொத்த தொகையில் பாதிப் பேரின் (17,115) வயது 20-ல் இருந்து 39 வரையாக இருக்கிறது.

  • 29,466 பேரில் 21,182 பேர் ஆண்கள்.

  • மூன்றில் ஒருவர் பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

  • இதில் 69 சதவிகிதம் பேர் அதாவது 20,450 பேர் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள்.

ஏன் திரும்பவில்லை?

இவர்கள் அனைவரும் விசிட்டிங் விசா மூலம் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இவர்கள் போனது என்னவோ வேலைக்காகவே! ‘அதிக சம்பளம் கிடைக்கும்’ என்ற ஆசையில் இவர்கள் அந்த நாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கே போனதும், இவர்களை மிரட்டி சைபர் அடிமைகளாக மாற்றி, சைபர் கிரைம் உள்ளிட்ட பல சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள்.

ஏன் திரும்பவில்லை?

அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள், இவர்களை இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்தப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, அவர்களே போன் செய்து பேசி இந்தியாவில் சைபர் மோசடி செய்வதை விட, இந்தியர்களின் குரல் மூலம் இந்த மோசடிகளைச் செய்வது மிகவும் எளிதாகும். இதற்காக இந்தியாவிலிருந்து பல லட்ச சிம்கள் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் இந்த மோசடி இந்திய போன் நம்பர்களைக் காட்டும் சர்வதேச போன் அழைப்புகள் மூலம் கூட நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் நடக்கும் 45 சதவிகித சைபர் குற்றங்கள் கம்போடியா, தாய்லாந்து, மியான்மார், வியட்நாம் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்துதான் நடத்தப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

குழு அமைப்பு

இந்தியர்கள் இந்த வேலைகளுக்குச் சென்று சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை மீட்கவும் மத்திய அரசு கடந்த மே மாதம் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள், மாநிலங்களின் மூத்த அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

வெளிநாடு சென்று மீண்டும் திரும்பாதவர்களின் தரவுகளைத் தருமாறு இந்தக் குழுவானது மாநில மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளிடம் கோரியிருந்தது. அடுத்ததாக, இனி மேலும் யாரும் இந்த வலையில் சிக்கி வெளிநாடு செல்லாமல் தடுக்க இமிக்ரேஷன் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு அமைத்த ‘குழு’!

அதன்படி தான், மேலே குறிப்பிட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு அடுத்ததாக உத்தரப்பிரதேசம், கேரளா, டெல்லி, குஜராத், ஹரியானா மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறன.

இப்படி நாடு திரும்பாதவர்கள் பெரும்பாலும் டெல்லி விமானநிலையத்தில் இருந்துதான் சென்றிருக்கிறார்கள். டெல்லி விமானநிலையத்திற்கு அடுத்த இடங்களில் மும்பை, கொல்கத்தா, கொச்சி விமானநிலையங்கள் உள்ளன.

தடை மற்றும் பிளாக்

சைபர் அடிமைகள் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களைத் தடுக்க போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட 2.17 கோடி மொபைல் தொடர்புகளும், 2.26 லட்ச மொபைல்களும் பிளாக் செய்யப்படப் போவதாகத் தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. மேலும் இதுவரை இந்திய நம்பர்களை காட்டும் 35 சதவிகித சர்வதேச போன்கால்கள் தடை செய்யப்பட்டு விட்டன என்றும், டிசம்பருக்குள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு பிரச்னைகள்!

இரண்டு பிரச்னைகள்!

சைபர் அடிமை கான்செப்டில் இரண்டு பிரச்னைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று, வேலைவாய்ப்பு. இன்னொன்று, சைபர் கிரைம்கள்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கின்றது. இவர்கள்தான் சைபர் அடிமைகளை உருவாக்கும் மோசடி பேர்வழிகளின் டார்க்கெட். அனைத்து வெளிநாட்டு வேலையும் இப்படி என்றில்லை. ஆனால் இதுவும் இருக்கிறது என்பதைக் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவேளை வெளிநாட்டு வேலைக்குச் செல்வதாக இருந்தால், ‘அது என்ன வேலைவாய்ப்பு’, ‘அது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் தானா?’, ‘நம்மைக் கூட்டிச் செல்லும் நபர் நம்பத் தகுந்தவரா… நம்பிக்கையானவரா’ போன்றவற்றை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது பாதுகாப்பானது.

வேலைக்காகச் செல்லும்போது, விசிட்டிங் விசாவைப் பயன்படுத்த முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ‘விசிட்டிங் விசா மூலம் வேலைக்குச் செல்கிறீர்கள்’ என்று யாராவது கூறினால் உடனடியாக உஷார் ஆகி விடுங்கள். அப்படியே விசிட்டிங் விசாவில் வேலைகளுக்குச் சென்றால், அந்த நாட்டு அரசிடம் பிடிபட்டால் சட்டரீதியான பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சைபர் கிரைம் பிரச்னை

சைபர் கிரைம் பிரச்னை

வேலைவாய்ப்பில் உஷார் ஒருபுறம் என்றால், போன் பயன்படுத்துவதில் கண்டிப்பாக உஷாராக இருக்க வேண்டும். இந்த இணையக் காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, படித்தவர்கள் தொடங்கிப் படிக்காதவர்கள் வரை அனைவரும் சைபர் குற்றங்களினால் ஏமாற்றுகின்றனர். அதனால், எந்த நம்பரிலிருந்து போன் கால் வந்தாலும் வங்கித் தகவல், OTP போன்ற முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்தது.

எவ்வளவு நம்பகமாகப் பேசினாலும், கட்டாயம் இந்த தகவல்களைப் பகிரவே கூடாது.

உஷார் மக்களே!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.