புதுடெல்லி: இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த 27-ம் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எக்ஸ் தளத்தில் விடுத்த செய்தியில், ‘‘ஹசன் நஸ்ரல்லா, லெபனான் மற்றும் காசா தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் என தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்கிறேன். இந்த சோகமான தருணத்தில் பாலஸ்தீன மற்றும் லெபனான் மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்’’ என தெரிவித்திருந்தார்.
நாடு முக்கியம் அல்ல… இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், ‘‘மெகபூபா முப்தி தனது பிரச்சாரத்தை ரத்து செய்ததன் மூலம் தீவிரவாதிகளின் மரணத்துக்கு அவர் கண்ணீர் வடிக்கிறார். தீவிரவாதிகளை தியாகிகள் என கூறுவது அவரது வழக்கம். ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹன் வானி கொல்லப்பட்டபோதும் அவர் கண்ணீர்சிந்தினார். பத்லா இல்லத்தில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது சோனியா கண்ணீர் சிந்தினார். இண்டியா கூட்டணி தலைவர்கள் எல்லாம் ஓட்டு வங்கி அரசியலுக்காக இதை செய்கிறார்கள். அவர்களுக்கு நாடு முக்கியம் அல்ல’’ என கூறியுள்ளார்.
பாஜக தலைவர் கவிந்தர் குப்தாவிடுத்துள்ள கண்டன அறிக்கையில், ‘‘தீவிரவாதி ஹசன் நஸ்ரல்லாமரணத்தில் மெகபூபா முப்திக்குஎன்ன பிரச்சினை? வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப்படும்போது, இவர்கள் அமைதி காக்கின்றனர். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டால், அவர்களுக்கு அஞ்சலி செலுத்த மெகபூபா தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து முதலை கண்ணீர் வடிக்கிறார்’’ என தெரிவித்துள்ளார்.