இலங்கை: கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்கள் 100 பேருக்கு உத்தரவு

கொழும்பு,

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அதிபராக பதவியேற்று கொண்ட அவர், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனிப்பட்ட பாதுகாப்புக்காக வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை, திரும்ப ஒப்படைக்கும்படி முன்னாள் எம்.பி.க்களை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுபற்றி மூத்த பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துப்பாக்கிகளை வைத்திருக்கிற முன்னாள் எம்.பி.க்கள், அவர்களிடம் உள்ள கைத்துப்பாக்கிகளை திருப்பி ஒப்படைக்கும்படி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 100-க்கும் மேற்பட்டோரிடம் கைத்துப்பாக்கிகள் உள்ளன என சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அவர்கள் கைத்துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு கடந்த ஆகஸ்டில், அமைச்சரவை செய்தி தொடர்பாளர் பந்துலா குணவர்தனா ஊடகத்திடம் பேசும்போது, நாட்டில் காணப்படும் வன்முறையை முன்னிட்டு, புதிய கொள்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முன்னாள் எம்.பி.க்கள், 2 துப்பாக்கிகளை அவர்கள் வசம் வைத்திருக்க அனுமதிக்கப்படும் என்றார். இந்த சூழலில், பாதுகாப்பு அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.