India National Cricket Team: இந்தியா – வங்கதேசத்திற்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி (India vs Bangladesh, Kanpur Test) உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்தியா பந்துவீசிய நிலையில், முதல் நாளில் வெறும் 35 ஓவர்களையே இந்தியாவால் வீச முடிந்தது. போதிய வெளிச்சமின்மை மற்றும் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் தடைபட்டது. அதேபோன்று, தொடர்ந்து மழை பெய்ததாலும், மைதானத்தில் மழைநீர் வடியாததாலும் 2ஆவது, 3ஆவது நாள் ஆட்டம் முற்றிலுமாக தடைபட்டது.
அந்த வகையில், இன்றைய (செப். 30) நான்காம் நாள் திட்டமிட்டபடி நடைபெற்றது. வங்கதேசம் (Team Bangladesh) 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களுடன் இருந்த நிலையில், இன்று 233 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. மாமினுல் ஹக் மட்டும் 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா கடைசியாக 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதாவது, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வங்கதேசம் 8.2 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்தது. அதற்கு பின்னர் களம் புகுந்த இந்தியாவின் (Team India) ஜெய்ஸ்வால் – ரோஹித் இணை முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது.
இந்திய அணியின் சாதனைகள்
ஜெய்ஸ்வால் மட்டுமின்றி அடுத்தடுத்து இறங்கிய அனைவரும் அதிரடியாக ரன் குவிக்கவே விரும்பினர். இதன்மூலம், இந்திய அணி அதிவேகமாக 50 ரன்களை அடித்தும் (18 பந்துகளில்), அதிவேகமாக 100 ரன்களை அடித்தும் (61 பந்துகளில்) உலக சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்களை அடித்திருந்தபோது ரோஹித் சர்மா இந்தியாவின் பேட்டிங்கை டிக்ளர் செய்தார். 52 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றிருந்தாலும், 147 வருட டெஸ்ட் வரலாற்றில் குறுகிய ஓவர்களிலேயே டிக்ளர் செய்த இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
WTC இறுதிப்போட்டி ஒன்றுதான் குறி
தொடர்ந்து, அடுத்து இறங்கிய வங்கதேசம் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஓப்பனர் ஜாகிர் ஹாசன் 10, ஹசன் முகமது 4 ரன்களுக்கும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் 26 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் 8 விக்கெட்டுகளே கையில் உள்ளது. நாளை விரைவாக வங்கதேசத்தை சுருட்டிவிட்டு வெற்றிக் கழிப்புடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு பிரகாசமாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
3 வீரர்கள் விடுவிப்பு
இந்நிலையில், கடைசி ஒருநாள் இருக்கும் இந்த வேளையில் இந்திய அணி அதன் மூன்று வீரர்களை இரானி கோப்பை தொடருக்காக (Irani Cup 2024) விடுவித்துள்ளது. சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், யாஷ் தயாள் (Yash Dayal) ஆகிய மூன்று பேரும் நாளை லக்னோவின் எகானா மைதானத்தில் தொடங்கும் இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) ரஞ்சி கோப்பை சாம்பியனான மும்பை அணியிலும், துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) மற்றும் யாஷ் தயாள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியிலும் விளையாட உள்ளன.
இரானி கோப்பையை எங்கு, எப்போது பார்ப்பது?
மும்பை அணிக்கு அஜிங்க்யா ரஹானேவும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் கேப்டனாக செயல்படுகின்றனர். இந்த போட்டி 5 நாள்கள் நடைபெறும். இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் நிலையில், இதனை Sports18 தொலைக்காட்சியிலும், Jio Cinema செயலியிலும் நேரலையில் காணலாம்.