தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, 2018-ல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பணித் துறை தரப்பில், “தாமிரபரணி ஆற்றின் ஓரங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் பெரும்பாலும் கழிவுகள் கலக்கின்றன. ஆறுகளின் மாசு தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே நடவடிக்கை எடுக்கும். பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க இயலாது.” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “தாமிரபரணி ஆற்றுக்கு உரிமை கோரும் நெல்லை மாநகராட்சி கடமைகளையும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.

பின்னர் நீதிபதிகள், “இந்த வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயற் பொறியாளர்கள், சுற்றுச்சூழல் துறையின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர்களை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கிறது. உள்ளாட்சி பகுதிகளில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்.3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.