Meiyazhagan: "தாத்தா வர்றாரு பாடலைவிட பச்சைக்கிளிகள் தோளோடு பாடல்தான்…" – கார்த்திக் நேத்தா பளீச்

பிரேம் குமார் – கார்த்திக் நேத்தா – கோவிந்த வசந்தா என்ற காம்போ மீது மக்களுக்கு அதீதமான நம்பிக்கை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.

இதற்கு முன் `96′ படத்தின் ஆல்பத்தின் ‘லைஃப் ஆஃப் ராம்’ என்ற பாடல் மூலம், பயணிக்க துடிக்கும் ஒவ்வொருவனுக்கும் ஆழமான மனவோட்டத்தை அழகாக வரிகளிலேயே காட்சிப்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. ‘காதலே காதலே தனிப்பெருந்துணையே’ என மனதைக் கலங்கவும் வைத்திருந்தார். தற்போது ‘டெல்டா கல்யாணம்’ என்ற கொண்டாடப்பட்ட பாடலையும், `அருள் மெய்’, `ஊர் மண்ணே’ என இரண்டு மெல்லிசை பாடல்களையும், ‘வெறி’ என்ற ஜல்லிக்கட்டு குறித்த ஒரு பாடலையும் மெய்யழகன் படத்திற்காக எழுதியிருக்கிறார். மெய்யழகனுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு உரையாடலைத் தொடங்கினோம்.

‘மெய்யழகன்’ ஸ்கிரிப்ட் புத்தகத்தைப் படிச்சதும் உங்களுக்கு என்ன தோனுச்சு? அந்த உலகத்தை நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்க ?

நான் படத்தோட ஸ்க்ரிப்ட் புத்தகத்தை இரண்டு முறை படிச்சேன். இயக்குநர் பிரேம் குமார் அண்ணா வேலை பார்க்கிற ஸ்டைலும் அதுதான். `96′ திரைப்படத்துக்கும் இதே மாதிரி ஒரு புத்தகத்தைதான் முதல்ல தயார் பண்ணினார். ஆனால், அந்த நேரத்துல நான் அந்த புத்தகத்தைப் படிக்கல. இப்போ `மெய்யழகன்’ படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்தை ஒரு சினிமாடிக் நாவலாகத் தயார் பண்ணியிருக்காரு. ஒவ்வொரு காட்சிகளும் காட்சிகள் மாதிரி இல்லாமல் நாவல் மாதிரியான வடிவுல நகர்கிற மாதிரி எழுதியிருந்தார். இப்போ படம் பார்க்கும்போது நமக்கு எந்த மாதிரியான உணர்வு பீறிடுதோ அது அவருடைய எழுத்துலையும் இருந்துச்சு. அது எனக்கு வியப்பையும் கொடுத்தது. முக்கியமாக நான் அதை படிக்கும்போது ‘மெய்யழகன்’ படத்துல வர்ற இரண்டு கதாபாத்திரங்கள் எனக்குள்ளும் இருந்ததை நான் பார்த்தேன். இந்த கதையோட அடிநாதமும் அதுதான். தொடக்கத்துல நம்முடைய வாழ்க்கையைதான் எழுத்து வடிவமாகப் படிக்கிறோமோனு தோனுச்சு. அந்தளவுக்கு எனக்கு நெருக்கமாக இருந்தது.

Lyricist Karthik Netha

இயக்குநர் பிரேம் குமாருக்கும் உங்களுக்குமான பரஸ்பர புரிதல் எப்படி இருக்கும் ?

நானும் பிரேம் அண்ணாவும் இதை வேலையாக நினைச்சு பண்ணவே மாட்டோம். பாடல் எழுதுறதை நான் வேலையாக எண்ணவே மாட்டேன். ஒரு பாடலுக்குச் சொல்கிற சூழலையும் நான் மறந்திடுவேன். அந்த சூழலுக்குள்ள ஒரு பேருணர்வு இருக்கும். அந்த உணர்வுக்கு உச்சபட்சமாக நம்ம ஒலியைக் வைத்து எப்படி சாத்தியப்படுத்த முடியும்னுதான் யோசிப்பேன். பிரேம் அண்ணா என்னுடைய வாழ்க்கையில் மிகவும் நெருக்கமானவர். நான் சினிமாவைவிட்டு போயிடலாம்னு நினைச்ச நேரத்துல என்னை பிரேம் அண்ணாதான் அரவணைச்சு பார்த்துகிட்டார். படத்துல `மெய்யழகன்’ கதாபாத்திரம் தேடித் தேடி அன்பைக் கொடுக்கிற மாதிரியான மனிதர்தான் இவரும். என்கிட்ட ஒரு குறை இருக்குனு என்னைவிட்டு நீங்கி போகிற மனிதன் அவர் அல்ல. அந்த தன்மை இயல்பாகவே அவர்கிட்ட இருக்கு. நான் வியந்து பார்க்கிற ஒரு மனிதனாகதான் இன்னைக்கும் அவர் இருக்காரு. என்னுடைய வாழ்க்கைக்கு என்னை பாடல் எழுத சொல்றது மாதிரிதான் இந்த படத்துக்கு. போன படமும் அதே மாதிரிதான். என்னுடைய வாழ்க்கைக்குள்ள போய் நான் யாருனு பார்க்கிறதுதான் இந்த ஒரு சூழலை உருவாக்கி தருது. என் வாழ்க்கையவே பூதக் கண்ணாடி வைத்து பார்க்கிறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கார் பிரேம் அண்ணா. இந்த படத்துல வர்ற நான்குப் பாடல்களும் என்னை நானே செம்மைப்படுத்துறதுக்கு வழி வகுத்தது.

‘டெல்டா கல்யாணம்’ தஞ்சாவூர் வட்டார வழக்கு பாடல், இதற்கான ஆராய்ச்சிகளெல்லாம் எப்படி நிகழ்ந்தது ?

தரவுகள் எடுக்க வேண்டியது இருந்தது. மற்றபடி நான் தமிழர் திருமண முறைகள் பற்றி நிறைய விஷயங்கள் வாசிச்சிருக்கேன். இது வெறும் தஞ்சாவூர் … டெல்டா மாவட்டத்துக்கான பாடலாக இருக்க வேண்டாம்னு நான் பிரேம் அண்ணன்கிட்ட சொன்னேன். அவரும் அதுக்கு ஒத்துகிட்டு ‘இது தஞ்சாவூர் மாவட்டம்னு மட்டும் பதிவாகினால் போதும். மற்றபடி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஒரு கொண்டாட்டப் பாடலாக இருக்கட்டும்’னு சொன்னாரு. அதுனால தஞ்சாவூர் வட்டார வழக்குச் சொற்களை எங்கெங்க போடணும்னு நான் பார்த்துகிட்டேன். அதுக்கேத்த மாதிரி ரெண்டு மூணு இடங்கள் அமைஞ்சது. மற்றபடி நாட்டார் நடையிலேயே போயிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். டெல்டா மாவட்டங்கள்ல திருமணங்கள்ல இந்த மாதிரியான உணவுகள் முக்கியமாக இருக்கும்னு பிரேம் அண்ணா சில லிஸ்ட் அனுப்பினார்.

ஓசைக்கும், சந்ததுக்கும் பொருந்தும் விஷயங்களை மட்டும் எடுத்து ‘தேங்காய் போலி கொண்டா… திரட்டி பாலைக் கொண்டா’னு பாடலை எழுதினேன். ஒரு வகையில இந்த பாடல் ஒரு வரலாற்று தரவாகவும் இருக்கும். 50 வருடம் கழிச்சு இந்த பாடலைக் கேட்கும்போது தஞ்சாவூர்ல இப்படியான விஷயங்கள் இருக்குனு ஒரு ஆவணமாகவும் இருக்கும். இதை மெனக்கெடல்னு சொல்லமுடியாது. இதை விரும்புதான் செய்றோம்.

Lyricist Karthik Netha

`96′ படத்தினுடைய ‘லைஃப் ஆஃப் ராம்’ பாடல் பயங்கரமான ஹிட். அதுக்குப் பிறகு மறுபடியும் இயக்குநர் பிரேம்கூட இணைஞ்சிருக்கீங்க. அப்போ அதே மாதிரியான ஹிட் பாடல் வேணும்னு ஒரு எதிர்பார்ப்பு வேலை பண்றது அழுத்தமாக இருக்கா? இது மாதிரியான அழுத்தம் ஒரு பாடலாசிரியருக்கு இருக்கலாமா?

இப்படியான அழுத்தம் ஒரு பாடலாசிரியருக்கு இருக்கக்கூடாது. நான் ஒரு ‘பயணி’ங்கிற அளவுலதான் என்னை நான் வச்சிருக்கேன். ஒரு பயணி தான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் வாழ மாட்டான். அதுக்கு மேல போய் அன்பையும் அருளையும் பெறுவதுதான் ஒரு கலையின் வேலையாகவும், கலைஞனுடைய வேலையாகவும் பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில இருக்கிறது நல்லதுதான். இந்த படத்துல அவங்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்தது இரட்டிப்பாக இருக்கும். அவங்க இந்த டீம் மறுபடியும் சேர்ந்தால் நல்ல பாடல்கள் வரும்னுதான் எதிர்பார்ப்பாங்க. நம்மை உணர்வு மையப்பட வச்சாங்க, நமக்கு ஒரு புரிதலை உருவாக்கினாங்க என்பதுதான் மக்களுக்குள்ள ஒரு எதிர்பார்ப்பாக இருக்கு. பிரேம் அண்ணா ஆகச்சிறந்த காட்சிகளைக் கொடுக்கணும்னு முயற்சி பண்றாரு. அதே நேரம் கோவிந்த் வசந்தா ஆகச்சிறந்த இசையைக் கொடுக்கணும்னு உழைக்கிறாரு. நான் மொழியால இந்த விஷயங்களெல்லாம் சாத்தியப்படுத்திணும்ங்கிறதைதான் எண்ணமாக வச்சிருந்தேன்.

‘ரத்தசாட்சி’ திரைப்படத்துல நீங்க உங்களுடைய 100வது பாடலை எழுதியிருந்தீங்க. ரொம்பவே குறைவான பாடல்கள்தான் எழுதியிருக்கீங்க. இதுக்கு காரணம் என்ன?

ஆமா, விருப்பம் சார்ந்துதான் பாடல்கள் பண்றேன். இப்போ இருக்கிற படங்கள்ல ஐந்து பாடல்கள் இருந்தால் அதுல நான்கு பாடல்கள் துள்ளல் பாடல்களாகதான் இருக்கு. துள்ளல் பாடலாக இருக்கிறதுல எந்த குறையுமில்லை. அதுவும் தேவைதான். நம்ம இயற்கையிலும் அது உண்டு. அந்த துள்ளல் என்ன மாதிரியான துள்ளல்ங்கிறதைப் பொறுத்துதான் நான் நிராகரிப்பேன். என்னுடைய மகிழ்ச்சிகள்ல இருந்து துள்ளல் வரணும். எடுத்துகாட்டுக்கு ‘தாத்தா வர்றாரு’ பாடல் துள்ளலைக் கொடுக்கலாம். ஆனால், இதைவிட எனக்குத் துள்ளல் கொடுக்கிறது ‘பச்சைக்கிளிகள் தோளோடு’ பாடல்தான். அந்த பாடல்ல ‘மண்ணில் ஆனந்தம்’ பாடல் வரி வரும்போது என்னை அறியாமலேயே எனக்குள் ஆனந்தம் ஏற்படுது. என்னை மெல்லிசை பாடல்கள்தான் துள்ள வைக்குது. அப்படியான பாடல்கள் இன்னைக்கு குறைவாகதான் வருது. அதுனாலதான் தொடர்ந்து அப்படியான பாடல்களை எழுதுறேன். ஆனால் இந்த நிலைமை மாறும்!

மெய்யழகன் (தமிழ்)

நீங்க இப்போ அதிகமாக இளம் இசையமைப்பாளர்களோட வேலை பார்க்கிறீங்க. அவங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன?

ஜஸ்டின் பிரபாகரன்கிட்ட நம்ம மரபான இசை குறித்த ஞானம் இருக்கு. ஜி.வி. பிரகாஷும், கோவிந்தாவும் அப்படிதான். முக்கியமாக இசையமைப்பாளர் சி. சத்யாவுக்கு இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் பற்றி பல விஷயங்கள் தெரியும். திரையிசைக்குச் சில விஷயங்கள் எப்போதும் தேவைப்படும். அது சிலருக்குப் பொருந்தி வராததுனால அவங்க சிறந்த இசையமைப்பாளர்கள் கிடையாதுனு எடுத்துக்கக்கூடாது. மெட்டுக்கு வரிகள் எழுதுவோம். அதன் பிறகு அந்த பாடலை மெருகேற்றுவதற்குச் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களை இசையமைப்பாளர்கள் பண்றதைப் பார்க்கும்போது ரொம்பவே வியப்பாக இருக்கும். ஜிப்ரான், ஜி.வி. பிரகாஷ், சி.சத்யா, ஜஸ்டின் பிரபாகரன்னு நான் பணியாற்றுகிற இசையமைப்பாளர்கள்கிட்ட நான் பலவற்றைக் கத்துக்கிறேன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.