லெபனான் எல்லையில் 100+ பீரங்கிகள்: ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் தரைவழி தாக்குதலின் பின்னணி என்ன?

பெய்ரூட்: லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பீரங்கிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து,ஹிஸ்புல்லா முகாம்களை தரைமட்டமாக்கி வருகின்றன.

லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஆகியவை ஈரானின் கைப்பாவையாக செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது.

இந்த சூழலில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரபோர் நடைபெற்றது. இதில் லெபனானில் 1,100 பேரும், இஸ்ரேலில் 165 பேரும் உயிரிழந்தனர்.

கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் 2-ம் நிலை தலைவர் புவாட்ஷூகர் உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000-க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறின. கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை முழுமையாக அழிக்கும் விதமாக, லெபனான் மீது நேரடியாக போர் தொடுக்க இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்தது. அமெரிக்காவின் தலையீட்டால் இந்த முடிவை மாற்றிய இஸ்ரேல் தற்போது தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பீரங்கிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து, ஹிஸ்புல்லா முகாம்களை தரைமட்டமாக்கி வருகின்றன.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: தெற்கு லெபனான் பகுதிகளில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சுரங்கப் பாதை அமைத்து இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை முழுமையாக அழிக்க இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் கடந்த 30-ம்தேதி இரவு லெபனான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.

தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகளை குறிவைத்து போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. லெபனானை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. இஸ்ரேல்எல்லையை ஒட்டி உள்ள லெபனான்பகுதிகளில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இஸ்ரேலின் டெல் அவிவ், கிலாட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேற்று ஏவுகணைகளை வீசினர். இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. ஹிஸ்புல்லா ஊடகப் பிரிவு மூத்த தலைவர் முகமது ஆரிப் கூறும்போது, ‘‘லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழையவில்லை. நுழைந்தால், மரணத்தை சந்திப்பார்கள்’’ என்றார்.

இதற்கிடையே, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறும்போது, ‘‘லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பது காலத்தின் கட்டாயம். இந்த விவகாரத்தில் ஈரான் தலையிட கூடாது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ‘இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத்தின் 40,000 வீரர்கள் முகாமிட்டுள்ளனர். தற்போது கூடுதலாக 3,000 வீரர்களும், எப்-15,எப்-16, எப்-22 ரக போர் விமானங்களும் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. போரால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மக்களுக்காக அமெரிக்க அரசு சார்பில் ரூ.838 கோடி நிதி வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.