'Cry Of The Hour' Statue : கொலைசெய்யப்பட்ட பெண் டாக்டருக்குச் சிலை; இணையத்தில் எழுந்த விவாதம்!

கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நீதி வேண்டி டாக்டர்கள் ஒரு மாதமாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சமீபத்தில் போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டு பணிக்குத் திரும்பினர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் திடீரென பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் இருக்கும் கட்டட வளாகத்தில் புதிய சிலை ஒன்றை வைத்திருக்கின்றனர்.

அது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் சிலை என்று கூறப்பட்டாலும், அது பெண் டாக்டர் சிலை கிடையாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

‘க்ரை ஆஃப் தி ஹவர்’ என்று பெயரிட்டுள்ள அச்சிலை பெண் டாக்டரின் வேதனை மற்றும் சித்ரவதையை பிரதிபலிக்கும் அடையாளமாக அதனை நிறுவி இருப்பதாக பயிற்சி டாக்டர் ஒருவர் தெரிவித்தார். இச்சிலை இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானவுடன் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இச்செயல் பெண் டாக்டரை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் வெளியிட்டுள்ள பதில், பெண் டாக்டரின் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்புகிறீர்களா? அவரது வேதனையான முகத்தை அல்லது வேறு எதையாவது வைத்து அதை செய்யுங்கள். இது எதுவாக இருந்தாலும் மிகவும் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்த அருவருப்பான சிலை அழிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று மற்றொருவர் எழுதினார். “இந்த நாட்டின் மருத்துவர்கள் மிகவும் காது கேளாதவர்கள். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடிப்படையில் ஏன் இப்படி ஒரு சிலையை உருவாக்கவேண்டும்” என்று மற்றொருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குனால் கோஷும் சிலை வைக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளார். இது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும், பொறுப்புள்ள நபர் இதை செய்யமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆர்.ஜி கர் மருத்துவமனை டாக்டர் திப்தத் கூறுகையில், ”நாங்கள் எந்த விதியையும் மீறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.