தெலுங்கானா மந்திரி கொண்டா சுரேகா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகர் நாகார்ஜுனா

ஐதராபாத்,

நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனுமான கே.டி. ராமராவ் தான் காரணம் என்றும், அவர் செய்த சில விஷயங்களால் சமந்தா மட்டுமின்றி பல நடிகைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பெண் மந்திரி கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார்.

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று கூறிய மந்திரி சுரேகாவுக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சூழலில், தான் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவதாக மந்திரி சுரேகா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பெண்களை ஓர் அரசியல் தலைவர் எப்படி சிறுமைப்படுத்தினார் என்று தான் சொல்ல வந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது என் நோக்கமல்ல. எனது கருத்தால் சமந்தாவோ, அவரது ரசிகர்களோ புண்பட்டிருந்தால் நான் சொன்னதை நிபந்தனையின்றி திரும்ப பெறுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் மந்திரி கொண்டா சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மந்திரி கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கவுரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியநிலையில், மந்திரி கொண்டா சுரேகா மன்னிப்பு கோரிய நிலையில், இந்த விவகாரத்தை நடிகர் நாகர்ஜுனா சட்ட ரீதியாகச் சந்திக்க களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.