சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிக்கான மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எழுதிய கடிதத்தில், “சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பு வழங்க வேண்டும்” என்று கோரினார். இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைஅமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம்2027-ம் ஆண்டில் நிறைவடையும். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர் களிடம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

5 மொழிக்கு செம்மொழி அந்தஸ்து: மராத்தி, பாலி, பிராக்ருதம், அசாமி, பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்துஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

வேளாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி: வேளாண் துறை உற்பத்தியில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமரின் ராஷ்டிரிய கிரிஷி யோஜனா (பிஎம்-ஆர்கேஒய்) திட்டத்தையும், உணவு பாதுகாப்பில் தன்னிறைவுகாண கிரிஷோன்னதி யோஜனா திட்டத்தையும் செயல்படுத்த மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.1,01,321.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் திட்டம்: நம் நாட்டில் தேவைப்படும் சமையல் எண்ணெய்யில் 50 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியா, மலேசியாவில் இருந்து பாமாயிலும், ரஷ்யா, உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெய்யும், பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து சோயாபீன்ஸ் எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் அடுத்த 7 ஆண்டுகளில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் நம் நாட்டை தன்னிறைவு பெறச் செய்யும் நோக்கில் ரூ.10,103 கோடி மதிப்பில் தேசிய சமையல் எண்ணெய் – எண்ணெய் வித்துக்கள் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2022-23-ம் ஆண்டில் நம் நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 39 மில்லியன் டன்களாக இருந்தது. இதை 2030-31-ம் ஆண்டுக்குள் 69.7 மில்லியன் டன்களாக அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 40 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்படும்.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும். இதன்படி, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2,028.57 கோடி போனஸாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி: மெட்ரோ திட்டம் தொடர்பான மத்திய அரசின் ஒப்புதலுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தங்களை நான் சமீபத்தில் சந்தித்து விடுத்த கோரிக்கை அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், விரைவாக இந்த திட்டத்தை முடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.