உணவுக்காக சென்றவர்கள்: கறுப்பின பெண்களை சுட்டுக்கொன்று பன்றிகளுக்கு இறையாக்கிய பண்ணையாளர்

ஜோகன்ஸ்பெர்க்

தென்னாப்ரிக்காவில் வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அவ்வப்போது அப்பகுதியில் வசிக்கும் கறுப்பின மக்கள் யாருக்கும் தெரியாமல் சென்று எடுத்துவருவது உண்டு. அதுபோல ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சென்ற இரண்டு கறுப்பின பெண்கள் திரும்பவில்லை.

மரியா (44) மற்றும் லொகாடியா (35) இருவரும் அந்தப் பண்ணைக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசார் நடத்திய சோதனையில், இரண்டு பெண்களின் உடல்களும் பன்றிகளால் சாப்பிட்டு மிச்சம் வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு தொழிலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரண்டு பெண்களையும் சுட்டுக்கொன்று, அவர்களது உடல்களை வெட்டி பன்றிக்கு உணவாக்கியிருப்பதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு ஜோஹன்னஸ்பெர்க்கின் லிம்போபோ மாகாணத்தில், நடந்த இந்த சம்பவம், நாட்டின் வெகு காலமாக நிலவும் இனவாத, பாலின பாகுபாட்டின் கொடூரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

போலீசார் விசாரணையில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேர் மீதான கொலை வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின்போது, அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பழைய கெட்டுப்போன பொருள்களை ஒரு டிரக்கில் கொண்டுவந்து பண்ணைக்குள் கொட்டிவிட்டுச் சென்றதையடுத்து, இந்த பெண்கள் அங்கு உணவுத் தேடி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணையின் உரிமையாளர், அத்துமீறி யார் பண்ணைக்குள் நுழைந்தாலும் சுட்டுக் கொல்லும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததும், தெரிய வந்துள்ளது.

இது குறித்து கொல்லப்பட்ட பெண்ணின் மகன் ராண்டி கூறுகையில், தனது தாயின் வாழ்வு இவ்வளவு கொடூரமாக முடியும் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. தனது நான்கு குழந்தைகளுக்கும் பசியாற்ற ஏதாவது கிடைக்காதா என்று தேடித்தான் தனது தாய் அந்த பண்ணைக்குச் சென்றிருப்பார் என்றும் அவர் கண் கலங்கியபடி கூறுவது நெஞ்சை உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு நீதி வேண்டி கோர்ட்டு அருகே ஏராளமான கறுப்பின பெண்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.