Cinema Roundup: விஜய்க்கு மோதிரம் பரிசளித்த தயாரிப்பாளர்!; ஜி.வி 700 -இந்த வார டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.

`கோட்’ பரிசு இது !

விஜய்யின் `கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்த கையோடு தன்னுடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளை விஜய் தொடங்கிவிட்டார். இவருடைய கரியரின் கடைசி படமாக கருதப்படும் இந்த `தளபதி 69′ படப் பூஜை நேற்றைய தினம் நடைபெற்றது. பூஜை முடிந்த சூடோடு அடுத்த நாளே (இன்று) படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. விஜய் சினிமாவுக்கென ஒரு டிவிட்டர் கணக்கையும், அரசியலுக்கென தனியாக ஒரு டிவிட்டர் கணக்கையும் வைத்திருக்கிறார்.

`GOAT’ ring

இந்த சினிமாக்கான டிவிட்டர் கணக்கில் நேற்றைய தினம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் `கோட்’ என முத்திரை பதித்த மோதிரத்தை காட்டியிருந்தார் விஜய். அந்த மோதிரத்தை `அம்மா கிரியேஷன்ஸ்’ டி. சிவா `கோட்’ படத்திற்காக இந்த `தளபதி 69′ படப் பூஜையில் விஜய்-க்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கிற `அமரன்’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது. முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிளான `ஹே மின்னலே’ என்ற மெலடி பாடல் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இது ஜி.வி. பிரகாஷின் கரியரில் 700-வது பாடல். கார்த்திக் நேத்தா வரிகளில் ஹரி சரணும், ஸ்வேதா மோகனும் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார்கள்.

Retta Thala & Hey Minnale Song

முடிந்தது ரெட்ட தலை!

அருண் விஜய், சித்தி இதனானி நடிக்கும் `ரெட்ட தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் `மான் கராத்தே’, உதயநிதி ஸ்டாலினின் `கெத்து’ போன்ற திரைப்படங்களை இயக்கிய திருகுமரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்திருக்கிறார் அருண் விஜய். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் அடுத்தக்கட்டப் பணிகளும் கூடிய விரைவில் தொடங்கவிருக்கிறது. அருண் விஜய்யின் `வணங்கான்’ திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

தமிழுக்கு வரும் `மெலடி கிங்’!

மலையாளத்தில் `ஹிருதயம்’, தெலுங்கில் `குஷி’, `ஹாய் நானா’ போன்ற திரைப்படங்களில் அழகான மெல்லிசை பாடல்களை கொடுத்த ஹேஷம் அப்துல் வாகப் டோலிவுட், மாலிவுட் என்பதை தாண்டி கோலிவுட்டிலும் அவ்வளவு பரிச்சயம். இப்படியான அழகான மெலடி ஆல்பத்தை கொடுத்த இவர் தமிழிலும் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். அறிமுக இயக்குநர் ஸ்ரீ காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோர் நடிக்கும் திரைப்படத்திற்கு இவர் இசையமைக்கவிருக்கிறார்.

Naslen & Mamitha Baiju

டிராக் அமைத்துக் கொடுத்த `பிரேமலு’!

மலையாளத்தில் வெளியான ராம்-காம் திரைப்படங்களில் `பிரேமலு’ திரைப்படத்திற்கு முக்கியமான இடம் இருக்கிறது. மலையாளத்தின் இளம் பட்டாளங்களான நஸ்லின், மமிதா பைஜு ஆகியோர் இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கிலும் பெரிய வெற்றியை இத்திரைப்படம் பதிவு செய்தது. பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமலேயே இத்திரைப்படம் வசூலில் அதிரடி காட்டியது. இத்திரைப்படத்திற்குப் பிறகு பெரிதளவில் பரிச்சயமான மமிதா பைஜு தற்போது விஜய்யின் 69-வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது அவரின் முக்கிய ஆசைகளில் ஒன்று என அவரே பேட்டிகளில் கூறியிருக்கிறார். தற்போது அந்த கனவும் நனவாகப்போகிறது. இப்படியான வாய்ப்புக்கு `பிரேமலு’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியும் ஒரு காரணம் எனலாம். அதே போல `பிரேமலு’வில் கதாநாயகனாக நடித்திருந்த நஸ்லெனும் `குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.