Mrs&Mr: பிறந்த நாள் பார்ட்டி; விஜய் பாடல்; கண்ணீர் விட்ட வனிதா விஜயகுமார்

நேற்று தனது 44 வது பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை வனிதா விஜயகுமார், கொண்டாட்டத்தின் இடையில் ராபர்ட் மாஸ்டருடன் ஜோடியாக நடித்திருக்கும் தனது Mrs & Mr படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

நடிகை வனிதா விஜயகுமார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இருவரும் ஆரம்பத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்னொரு சீசனில் ராபர்ட் மாஸ்டரும் பிக்பாஸ் போனார். ராபர்ட் பங்கேற்க வனிதா தான் சிபாரிசு செய்ததாகவும் அந்தச் சமயத்தில் பேசப்பட்டது.

பிரிந்த பிறகும் இருவரும் நண்பர்களாக இருந்தனர். ஏற்கனவே இருவரும் சேர்ந்து  `எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம் ‘ என்ற பெயரில் படம் எடுத்திருந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தனர்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தாய்லாந்தில் உள்ள ஒரு கோவிலில் பூஜை போட்டு தொடங்கப்பட்டது. படத்தில் வனிதாவின் மகள் ஜோவிதாவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட பூஜை குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தப் பின்னணியில் கடந்த வாரம் ‘சேவ் த டேட்’ என ராபர்ட் மாஸ்டருடன்  போஸ்டர் வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.

வனிதா விஜயகுமார்

இந்நிலையில் பட அறிவிப்புக்கு வனிதா அக்டோபர் ஐந்தாம் தேதி தேர்ந்தெடுத்ததன் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக பேசப்பட அது குறித்து விசாரித்தோம்.

”அக்டோபர் 4ம் தேதி அவருடைய பிறந்த நாள். இந்த வருடம் 44 வது வயது தொடங்குகிறது. அதனால் பிறந்தநாளை கொண்டாடிட்டு அப்படியே படம் குறித்த அறிவிப்பை வெளியிட நினைத்தார். அதனால் தன் நண்பர் ஒருவருடைய நட்சத்திர ஓட்டல்ல பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நள்ளிரவு 12  மணிக்கு கேக் வெட்டி முடித்ததும் அங்கே பட அறிவிப்பையும் வெளியிட்டார்’ என்றனர் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட சிலர்.

சந்திரலேகா படத்தில் விஜய்யுடன் வனிதா விஜயகுமார்

‘பார்ட்டியில் வேற என்னவெல்லாம் ஹைலைட்ஸ், யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க’ என மேலும் சிலரிடம் கேட்டதற்கு,

”ராபர்ட் மாஸ்டர் தன் அம்மா மற்றும் தோழியுடன் வந்திருந்தார். பாத்திமா  பாபு உள்ளிட்ட வனிதாவுக்கு நெருக்கமான சினிமா, டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யுடன் வனிதா நடித்த ‘சந்திரலேகா’ படத்திலிருந்து ‘அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்’ பாடல் ஒலிக்க, சில நிமிடங்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.” என்றார்கள் அவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.