கொல்கத்தா: தங்கள் கோரிக்கைகளை அரசு முழுமையாக நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்து வெள்ளிக்கிழமை, பயிற்சி மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிட்டனர். அதேசமயம், 24 மணி நேரத்துக்குள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், சாகும்வரையில் உண்ணாரவிதப் போராட்டம் மேற்கொள்ளோம் என்று எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கொல்கத்தா நகரில் எஸ்பிளனேட் பகுதியில் பயிற்சி மருத்துவர்கள் திரளாக கூடி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கு மத்தியிலும் அவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாக தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல் உட்பட 10 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். அரசு தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வரையில் தங்கள் போராட்டம்தொடரும் என்று தெரிவித்து உள்ளனர்.