IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது நடக்கும் என்பதுதான் பலரும் எதிர்பார்த்து இருக்கும் ஒன்றாகும். ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகள் மற்றும் வீரர்களை தக்கவைக்கும் விதிகள் ஆகியவற்றை செப்டம்பர் கடைசி வாரத்தில் பிசிசிஐ அறிவித்தது. வரும் அக். 31ஆம் தேதிக்குள் அணிகள் தங்கள் தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க வேண்டும்.
ஒரு அணி 6 வீரர்களை தக்கவைக்கலாம். அதாவது, ஏலத்திற்கு முன் பிசிசிஐயால் வரையறுக்கப்பட்ட விலை வகைமையின் கீழும் வீரர்களை தக்கவைக்கலாம், இல்லையெனில் அவர்களை ஏலத்திற்கு விடுவித்து RTM கார்டுகளை பயன்படுத்தியும் தக்கவைத்துக்கொள்ளலாம். முதல் ஸ்லாட் – ரூ.18 கோடி, 2வது ஸ்லாட் – ரூ.14 கோடி, 3வது ஸ்லாட் – ரூ.11 கோடி, 4வது ஸ்லாட் – ரூ.18 கோடி, 5வது ஸ்லாட் – ரூ.14 கோடி, 6வது ஸ்லாட் – ரூ. 4 கோடி (Uncapped) என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் ஒரு அணி 5 Capped வீரர்களை தக்கவைக்கலாம். அதேபோல் குறைந்தபட்சம் ஒரு Uncapped வீரரையாவது தக்கவைக்க வேண்டும்.
விதிகளில் மாற்றம்
Uncapped வீரர் விதி ஒன்றும் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இந்திய வீரர் ஒருவர் ஐந்து வருடங்களாக டி20, டெஸ்ட், ஓடிஐ என சர்வதேச போட்டியின் பிளேயிங் லெவனில் விளையாடி ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தால் அவர் Uncapped வீரராக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார். எம்எஸ் தோனி, பியூஷ் சாவ்லா, அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மோகித் சர்மா என பல வீரர்கள் இந்த சீசனில் Uncapped வீரராக வர வாய்ப்புள்ளது.
அணிகளுக்கான ஏலத்தொகை தற்போது ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் ரூ. 90 கோடியாக இருந்தது. RTM விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு RTM பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட வீரருக்கு அதிக தொகையை ஏலம் கேட்ட அணி மற்றொரு முறை ஏலம் கேட்க வாய்ப்பளிக்கப்படும். அந்த உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே RTM ஆப்ஷனை ஒரு அணி பயன்படுத்த முடியும். இல்லையெனில் ஏலம் கேட்ட அணியே அந்த வீரரை தட்டித்தூக்கும்.
மெகா ஏலம் எங்கு, எப்போது நடைபெறும்?
இந்த புதுபிக்கப்பட்ட விதிகளால் ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள இடம், மாதம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. நிச்சயம் இந்த முறை மெகா ஏலம் இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் என்றே தெரிகிறது. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்காசிய நாடுகளில் நடைபெறவே 90% வாய்ப்பு உள்ளது. அதிலும் சௌதி அரேபியா முன்னிலை வகிப்பதாக தகவல்கள் கூறுகின்றனர். சௌதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மினி ஏலம் துபாயில் நடைபெற்றிருந்த நிலையில் இந்த முறை துபாயும் பிசிசிஐயின் பிளானில் உள்ளது. லண்டனில் நடத்த பிசிசிஐ முதலில் பேசியதாகவும், நவம்பர் – டிசம்பர் அங்கு குளிர்காலம் என்பதால் ஏலத்தை அங்கு நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. பெரும்பாலும் சௌதி அரேபியாவில் நடத்தவே பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும், டிசம்பர் மாதம் நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.