கோட்டா: இந்தியா ஒரு இந்து தேசம் என்று வலியுறுத்தியுள்ள ராஷ்ட்ரீய ஸ்வம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், தொடர்ந்து உரையாடுவதன் மூலம் இந்துக்கள் இணக்கமாக வாழ்வதாக கூறியுள்ளார். மேலும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து சமூகம் அதன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பாரானில் சனிக்கிழமை நடந்த ‘ஸ்வயம்சேவக் ஏகாத்ரிகரன்’ என்ற நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்து என்ற பதம் பின்னால் வந்ததாக இருந்தாலும் நாம் இங்கு ஆதியிலிருந்தே இருக்கிறோம். இந்துக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார்கள். தொடர் உரையாடல்கள் மூலம் அவர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஜாதி, மதம், மொழி பேதங்களின் வேற்றுமைகளைக் கடந்து இந்து சமூகம் அதன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும்.
ஒழுங்கான நடத்தை, அரசின் மீதான கடமை, இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பு போன்றவையே அத்தியாவசியமான பண்பு நலன்கள். ஒரு சமூகமென்பது தனி நபர் மற்றும் அவர்களின் குடும்பங்களால் ஆனது இல்லை.
ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகள் இயந்திரத்தனமானது இல்லை; மாறாக சிந்தாந்தம் அடிப்படையிலானது. இது ஒரு மகத்தான இயக்கம். இதன் மதிப்புகள் அதன் தலைவர் முதல் தொண்டர் வரை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகம் வரை பரவுகிறது.
சமூக நல்லிணக்கம், நீதி, சுகாதாரம், கல்வி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவைகளில் கவனம் செலுத்த வேண்டும். தொண்டர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, சமூக விழுமியங்கள், குடும்பங்களுக்குள் குடிமை உணர்வுகள் போன்ற சமூகத்தின் அடிப்படை கூறுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் சர்வதேச மதிப்பு மற்றும் நிலைப்பாடே அதன் வலிமைக்கு காரணம். தேசம் வலுப்பெறும் போது வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு பாகவத் பேசினார்.