காலம் காலமாக பல பெண்களின் மனதுக்குள் அழுந்திக் கிடக்கிற ஒரு புழுக்கம் இது. என்ன புழுக்கம் அது என்கிறீர்களா? தன்னுடைய மார்பகம் சிறியதாக இருக்கிறது என்கிற எண்ணமே அது. இது தொடர்பாகத்தான் பாலியல் மருத்துவர் காமராஜ் இன்றைக்கு பேசுகிறார்..
“மனிதர்கள் காடுகளில் வசித்த காலங்களில், குண்டான பெண்களையே அழகானவர்களாக நினைத்தார்கள். அதற்கு காரணம், அந்தக் காலகட்டங்களில் உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்டது. அதற்கு உடல் வலுவான பெண்களே தேவைப்பட்டார்கள். அப்படி உழைத்து உழைத்து, திரண்டு ஓங்குதாங்காக இருந்த பெண்களை அவர்கள் அழகானவர்களாக நினைத்தார்கள். இன்றைக்கும் இந்த எண்ணம் சிலரிடம் இருப்பதைப் பார்க்கலாம்.
சிறிய மார்பகம் இருக்கிற பெண்களுக்கு குழந்தைப் பிறந்ததும் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காது என்கிற தவறான புரிதலும் பலரிடம் இருக்கிறது.
சிறிய மார்பகம் சில நேரங்களில் சம்பந்தப்பட்டப் பெண்களுக்கு திருமணமாவதிலும் தடையாக இருக்கிறது. இதில், தடை சொல்கிறவர்களின் மனப்பான்மையில்தான் பிரச்னை இருக்கிறதே தவிர, பெண்களுடைய உடம்பில் அல்ல.
நுட்பமாக கவனித்தீர்கள் என்றால், மேலே உள்ள மூன்று எண்ணங்களிலுமே, ஆணாதிக்க மனப்பான்மை இருப்பது புரியும். வேலை பார்க்க உடல் பலமான பெண் வேண்டும், என் குழந்தை வலுவாக வளர பல வருடம் தாய்ப்பால் தரப்பட வேண்டும், எனக்கு பெரிய மார்பகம்தான் பிடிக்கும். அதனால், எனக்கு மனைவியாக வருகிற பெண்ணுக்கு மார்பகங்கள் பெரியதாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான். இதற்காகவெல்லாம் பெண்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் என் கருத்து.
இனி, சம்பந்தப்பட்ட பெண்களுடைய மனப்புழுக்கத்துக்கானத் தீர்வை சொல்கிறேன். மார்பகங்கள் சிறியதாக இருப்பதனால் உங்களை ஒருவர் நிராகரிக்கிறார் என்றால், அப்படிப்பட்ட நபருடன் திருமண வாழ்க்கை தேவையா என்பதை யோசியுங்கள்.
சிறிய மார்பகங்களில் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காதோ என்று கவலைப்படுகிற பெண்களுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் அச்சப்படுவதில் எந்த மருத்துவ உண்மையையும் இல்லை. தாய்ப்பால் சுரப்புக்கும் மார்பகங்களின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஹார்மோன் சம்பந்தப்பட்ட விஷயம்.
சிறிய மார்பகம் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய உறவில் மகிழ்ச்சி கிடைக்காது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் பார்த்தால் இதுவும் தவறுதான்.
சிறிய மார்பகங்கள்தான் சென்சிட்டிவ். மொத்த நரம்புகளும் சிறிய இடத்தில் இருப்பதால், இந்தப் பெண்களுக்கு தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி அதிகமாக கிடைக்கும்.
பொருளாதாத்தில் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள்தான், பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களை விரும்புகிறார்கள் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் உலவி கொண்டிருக்கிறது. உண்மையில் ஆணும் பெண்ணும் சமம் என்கிற அடிப்படை புரிதல் கொண்ட ஆணுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இந்த அடிப்படை புரிதல் இல்லாத ஆண்களும், அதே போன்ற எண்ணவோட்டத்துடன் அவனைச் சுற்றி இருப்பவர்களும்தான் இதுபோன்ற எண்ணங்களை சமூகத்தில் இன்னமும் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்டவர்கள் சிலர்தான். உடல் உறுப்புகள் பற்றிய கருத்துகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. அதற்காக வருத்தப்படுவதோ, மார்பகங்கள் பெரிதாக தெரிய வேண்டும் என்பதற்காக, மார்க்கெட்டில் கிடைக்கிற க்ரீம்களை பயன்படுத்துவதோ தேவையில்லாத விஷயங்கள். அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதுப்படுத்திக்கொள்வது, உங்கள் உடலுக்கு தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.’’