தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை விலக்கு புறவழிச்சாலை பகுதியில் தேனியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற தனியார் பஸ், டூவிலர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்ஸின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய டூவிலர் சிறிது தூரம் இழுத்துச் சென்றதில் உராய்வு ஏற்பட்டு பஸ்ஸின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. பஸ் டிரைவர் மிகவும் சிரமப்பட்டு பஸ்ஸை நிறுத்தினார்.
அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகள் 50 பேர் அலறியடித்துக் கொண்டு பின்பக்கமாக கீழே இறங்கி ஓடினர். இதற்கிடையே தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் பற்றியெரிந்து தீக்கிறையானது. இதில் டூவிலரில் வந்த தேனியைச் சேர்ந்த அரசாங்கம்(50) என்பவர் உடல் கருகி பலியானார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பஸ் எரிந்த விபத்தை காண அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் சூழ்ந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் அந்த புறவழிச்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.