புனே: இந்துத்துவா சித்தாந்தவாதிகளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம்சாட்டி விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரன் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி அக்.23-ம் தேதி ஆஜராகுமாறு புனே சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த சம்மன் அனுப்பப்பட்டது.
சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஆண்டு இந்த வழக்கு எம்.பி., மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
சத்யாகி சாவர்க்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்க்ராம் கோல்கத்கர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 (அவதூறு) கீழ் ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்க வேண்டியது அவசியம். அதற்காக அவர் அக்.23-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளார்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சத்யாகி சாவர்க்கர் தனது மனுவில்,‘கடந்த 2023ல் லண்டனில் பேசிய ராகுல் காந்தி வி.டி. சாவர்க்கர் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தானும், தனது ஐந்தாறு நண்பர்களும் முஸ்லிம் நபர் ஒருவரை அடித்தோம். அதனால் தான் மகிழ்ச்சியாக உணர்ந்ததாக கூறியுள்ளதாக’தெரிவித்தார்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. சாவர்க்கர் எங்கேயும் அப்படி ஒரு விஷயத்தையும் எழுதவில்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கற்பனையானது, பொய்யானது, தீங்கு விளைவிக்கக்கூடியது” என்று சத்யாகி தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய விஷ்ரம்பாக் காவல் நிலையம், முதல்பார்வையில் அந்த புகாரில் உண்மை உள்ளது என்று தெரிவித்துள்ளது.