கோவை: இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தில் நடத்தி வரும் இனப்படுகொலைகளை இந்தியா கண்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
கோவை ஜீவா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈஷா மையத்தில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் சேர்க்கப்பட வேண்டும்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மலைவாழ் மக்களுக்கு சொந்தமான நிலம் தனியார் ரிசார்ட் உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக போராடிய இளைஞர் ஆனந்தன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையும் வனத்துறையும் மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதை நிறுத்த வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் 120 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லார் அரசு பழப்பண்ணை யானை வழித்தடம் என்ற பெயரில் மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தில் நடத்தி வரும் இனப்படுகொலைகளை இந்தியா கண்டிக்க வேண்டும்.
சென்னையில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கத்தில் இணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஆனால் உரிமையை நிர்வாகம் மறுத்து வருகிறது. இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து போராடினோம்.
அங்கு நடைபெறும் சம்பவங்களை ஆய்வு செய்து தீர்வு காண முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறு, சிறு நடுத்தர தொழில்கள்தான் பெருமளவில் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. அவற்றை நலிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.