Meiyazhagan: “அண்ணனும், அண்ணியும் இதைத்தான் சொன்னார்கள்!'' – நடிகர் கார்த்தி

கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன்.

96 பட இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அரவிந்த் சுவாமி இப்படத்தில் முதல் முறையாக கார்த்தியுடன் கூட்டணி வைத்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அர்விந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பேசும் இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று (அக் 6) நடைபெற்றது. கார்த்தி, அர்விந்த் சாமி, இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

மெய்யழகன்

நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் படத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் படத்தைப் பார்த்தபின் அவர்களின் நினைவுக்குறிப்புகளை எழுதி வருகின்றனர். விவாதங்கள் நிகழ்வதே நல்ல கலைப்படைப்புக்கான அடையாளம்தான். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சங்களையும் கொண்ட படங்கள் எப்போதாவதுதான் வெளியாகும். மெய்யழகன் அந்த மாதிரியான ஒரு சினிமா.

நம் சொந்தங்களை, கலாச்சாரங்களை, வரலாறுகளை மறந்து வாழ்கிறோமே என நினைப்பவர்களுக்கான கதையாக இது இருந்தது. வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கு இப்படம் என்ன சொல்ல வருகிறது என்பது புரியும் என நம்பினோம். என்ன சொல்ல முயற்சி செய்தோமோ அதை செய்துவிட்டதாக உணர்கிறோம். ஒரு சரியான காட்சியும் இசையும் அழ வைக்க முடியுமா என மெய்யழகனில் நுணுக்கமாக வேலை வாங்கியிருக்கிறார். பிரேம் குமார் சரித்திர கதையொன்றை வைத்திருக்கிறார். அபாரமான கதையாக வந்துகொண்டிருக்கிறது. விரைவில், எழுதி முடிப்பார்.

கார்த்தி

பிரேம் குமார் எழுதியதைவிட அத்தான் கதாபாத்திரத்தை அர்விந்த் சாமி தன் நடிப்பால் எங்கோ கொண்டு சென்றுவிட்டார். இந்த மாதிரி படங்களெல்லாம் திரும்பக் கிடைக்காது. பெருமையாக நினைப்போம் என அண்ணன் (சூர்யா) சொல்லிக்கொண்டே இருப்பார். அண்ணியும் (ஜோதிகா) படத்தைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி கதைகளில் தொடர்ந்து நடியுங்கள் என வாழ்த்தினார்.” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.